Breaking

Friday

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி: இளைஞர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதிலுள்ள சவால்கள்கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் பச்சைப்பசேலெனக் கண்ணைக் கவரும் வயல்களின் நடுவே கம்பீரமாய்க் காட்சி தரும் ஓர் அழகிய பிரதேசமே சம்மாந்துறை. முஸ்லிம்கள் செறிந்து வாழும் இப்பிர தேசத்தை 40 இற்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள் அலங்கரிக்கின்றன.

இப்பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயம் காணப்படுவதோடு செங்கல் உற்பத்தி, நன்னீர் மீன்பிடி மற்றும் சிறுகைத்தொழில்கள் என்பவற்றிலும் மக்கள் ஈடுபடுகின்றனர். சுமார் 55000 ஹெக்டேயரில் இங்கு நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. அதேபோன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவு சம்மாந்துறையிலேயே அமைந்துள்ளது.
 சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில் பயிற்சி நிலையம் என்பனவும் இப்பிரதேசத்தில் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். அந்த வகையில் இப்பிரதேசத்தில் அமைந் திருக்கின்ற சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி இளைஞர்களுக்கான ஒரு வரப்பிரசாதமாகும். இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் 39 தொழில்நுட்பக் கல்லூரிகளில் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி பழை மை வாய்ந்ததாகத் திகழ்கிறது.
1974ம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ அப்துல் மஜீட் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூ தினால் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இத் தொழில்நுட்பக் கல்லூரி சம்மாந்துறையில் ஆரம்பிக்கப்பட்டமையானது குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களுக்குக் கிடைத்த பெரியதோர் வரமாகக் காணப்படுகின்றது. 
உள்ளூர் மற்றும் சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப பங்களிப்பு நல்கும் உயர் திறனுடைய மனித வலுவையும் தொழில்சார் தேர்ச்சிகளையும் வழங்கும் பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனமாக திகழ்தல் என்ற தூரநோக்கோடும் (Vision), போட்டி மிக்க வேலைத்தளத்தில் வெற்றிகரமான செயலாற்றுகைக்கு அவசியமான அறிவு, தொழில்நுட்பத் திறன்கள், மனப்பாங்குகள் நிறைந்த மனித வளத்தினை ஊக்கம்மிக்க சிறந்த அனுபம் வாய்ந்தவர்களைக் கொண்டு உருவாக்குதல் என்ற பணிக்கூற் றோடும் (Mission)  சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகின்றது.
இளைஞர்கள் ஒவ்வொரு சமூகத்தினதும் முதுகெலும்புகள். அத்தகைய இளைஞர்கள் தமது எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கான சரியான தொழில் வாய்ப்புக்களை அடைந்து கொள்ளத் தவறும் பட்சத்தில் மோசமான வழிமுறைகளையே தேர்ந்தெடுப்பர். 
இதன் விளைவாக நாடு பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என்ற யதார்த்தத்தை அரசாங்கம் உணர்ந்ததன் விளைவாகவே இத்தகைய தொழில்நுட்பக் கல்லூரிகள் நாட்டில் தோற்றம் பெற்றன. இதன் காரணமாக, இளைஞர்கள் தலைசிறந்த தொழில் நுட்பக் கல்வியைப் பெற்று தங்களது தொழில் ஆற்றல்களை வளர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்வதோடு, சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தகை மையை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப் பங்களும் அவர்களுக்கு கிடைக்கின்றன.
 அதே போன்று தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படு கின்றன. கற்கை நெறிகளை முழுநேரமாக அல்லது பகுதி நேரமாக தொடர்வதற்கான வாய்ப்பு, மாதாந்தம் ரூபா 1000க்கு மேற்படாத நாளாந்த கொடுப்பனவு, நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வுகூடம், நூலக வசதி மற்றும் பாடநெறியின் பின் னரான தொழில் பயிலுனர் பயிற்சி என் பன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் பாரியளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கல்லூரியின் பழைய கட்டடங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருவதோடு பல்வேறு கற்கை நெறிகளுக்காகவும் பெறுமதி வாய்ந்த உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றன. 
என்றாலும் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் கணனிகள் போதியளவு இல்லாமையினால் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கற்கை நெறிகளைத் தொடர்வதில் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். இத்தொழில்நுட்பக் கல்லூரி ஆரம்பித்து 40 வருடங்களை கடந்துவிட்ட நிலையில், இந்தக் கல்லூரிக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்லூரிகள் பல்வேறு வசதிகளுடன் சிறப்பாக இயங்க இக்கல்லூரியில் மாத்திரம் கணனியோடு தொடர்புபட்ட கற்கை நெறிகளை இன்னும் தாங்கள் கற்பனையிலேயே கற்று வருவதாக இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் அங்க லாய்க்கின்றனர். 
அதேபோன்று, நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள முஸ்லிம், தமிழ் மாணவர்கள் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் தமது கற்கைநெறிகளை தொடர்ந்து வந்தாலும் அண்மைக் காலமாக இத் தொழில் நுட்பக் கல்லூரிக்கு வரும் மாணவர்களின் வீதம் குறைந்து வருவதானது சுட்டிக் காட்டப்பட வேண்டியதோர் அம்சமாகும்.
தனியார் கல்வி நிறுவனங்களின் கவர்ச்சிகளும், மாணவர்கள் அவற்றை நம்பி தரமற்ற கற்கை நெறிகளுக்கு பெரும்பணத்தினை செலவுக் செய்வதுமே இதற்கான பிரதான காரணம். இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்களின் போலிக் கவர்ச்சிகளினால் ஈர்க்கப்பட்டு தமது பிள்ளைகளை எவ்வளவு பணம் கொடுத்தாவது அங்கு சேர்க்க வேண்டும் என்ற பெற்றோர்களின் அதீத ஆர்வமும் இத் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களின் நுழைவு வீதம் வீழ்ச்சியடைந்திருப் பதற்கான மற்றுமொரு பிரதான காரணியாகும்.
மேலும், இத்தொழில்நுட்பக் கல்லூரியில் இன்னும் பல புதிய கற்கைநெறிகளை ஆரம்பிப்பதற்கான வசதிகள் இருந்தாலும் அதனை நடத்துவதற்கான ஆசிரியர் பற்றாக்குறையினால் அவற்றை தொடங்க முடியாதுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவிக் கின்றது. எனவே, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் காணப்படுகின்ற இத்தகைய பிரச்சினைகளை 
அரசாங்கம் உரிய முறையில் இணங்கண்டு அவற்றுக்கு தீர்வு காண்பது இப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது கற்கைநெறிகளை சிறப்பாகப் பூர்த்தி செய்து வளமான தொழில்களில் பிரகாசிக்க வழிசமைப்பதோடு, மாணவர்களும் தனியார் கல்வி நிறுவனங்களின் போலிக் கவர்சிகளின் பின்னால் அல்லுண்டு செல்லாமல் இத்தொழில்நுட்பக் கல்லூரியில் காணப்படுகின்ற பெறுமதியான கற்கைநெறிகளில் இணைந்து பயன்பெற முன்வர வேண்டும்.

By-Sajith Ali AR (Sammanthurai)


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

LightBlog