Breaking

Thursday

2016 அமெரிக்க தேர்தல் முடிவு - டொனால்ட் டிரம்ப்பின் வாழ்க்கை குறிப்பு.


தேர்தலில் அதிபர் பதவிக்காகப் போட்டியிட முடிவெடுக்க நீண்ட காலத்துக்கு முன்பே, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிக பிரபலமான , சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்ட கோடீஸ்வரர்.

ஆரம்ப கட்டங்களில் அவர் வெல்வது அபூர்வம் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது அவர்தான் அடுத்த அமெரிக்க அதிபர்.
குடிவரவுப் பிரச்சனையில் அவருடைய சர்ச்சைக்குரிய நிலைப்பாடு மற்றும் சினத்தைத் தூண்டிய பிரசார பாணி ஆகியவை மட்டுமல்லாது, அவரது கடந்த கால பிரபல்யமும் அவர் குறித்த அவநம்பிக்கை உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.
ஆனால் , குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் மூத்த குடியரசுக் கட்சி வேட்பாளர்களையெல்லாம் ஓரங்கட்டி, இந்த 70 வயது வர்த்தகர், ஆருடங்களையெல்லாம் பொய்யாக்கினார்.
இப்போது அதிபர் தேர்தலிலும் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் பிளவு படுத்தும் போட்டிகள் ஒன்றில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஹிலரி கிளிண்டனை வென்றுள்ளார் டிரம்ப்.

ஆரம்ப கட்ட வாழ்க்கை
நியு யார்க்கின் ரியல் எஸ்டேட் வணிகர் ஃப்ரெட் டிரம்ப்பின் நான்காவது மகன் டிரம்ப்.
செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவரானாலும்,டிரம்ப் அவரது அப்பாவின் நிறுவனத்தில் மிகவும் கீழ் நிலை வேலைகளை பார்க்கவேண்டியிருந்த்து.
பின்னர் அவர் பள்ளியில் தவறாக நடந்து கொண்டதால் 13வது வயதிலேயே ராணுவப் பள்ளி ஒன்றுக்கு அனுப்பப்பட்டார்.
பின்னர் அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள வார்ட்டன் கல்லூரியில் படித்து முடித்தார்.

அவரது அண்ணன் ஃப்ரெட் விமானியாக முடிவு செய்த நிலையில், அப்பாவின் நிறுவனத்துக்கு அவருக்குப் பின்னர் வாரிசானார்.
ஃபிரெட் டிரம்ப் மதுப் பழக்கத்தால் அவரது 43வது வயதில் காலமானது, டொனால்ட் டிரம்பை அவர் வாழ்க்கை முழுவதும், மதுவையும் சிகெரெட்டுகளையும் தவிர்க்க வைத்த்து என்கிறார்

 அவரது சகோதரர்.
தான் வீட்டு மனை வணிகத்தில் தனது அப்பாவிடம் ஒரு மிலியன் டாலர் கடன் வாங்கி நுழைந்ததாக டிரம்ப் கூறியிருந்தார்.
அதற்குப் பின்னர்தான் அவர் தனது தந்தையின் நிறுவனத்தில் இணைந்தார்.

நியுயார்க்கில் தன் தந்தையின் வீட்டு குடியிருப்புத் திட்டங்களை நிர்வகிக்க அவர் உதவினார்.
பின்னர் 1971ல் அவர் அந்த நிறுவனங்களைக் கையில் எடுத்தார்.
அவர் தந்தை 1999ல் காலமானார். தனது தந்தைதான் தனக்கு உத்வேகமாக இருந்தார் என்று அப்போது டிரம்ப் கூறியிருந்தார்.

வர்த்தகப் பேரரசர்
டிரம்ப் தனது குடும்ப வணிகத்தை, ப்ரூக்லின் மற்றும் குவீன்ஸ் பகுதிகளில் நடத்திய குடியிருப்புத் திட்டங்களிலிருந்து, கவர்ச்சிகரமான மன்ஹாட்டன் திட்டங்களுக்கு மாற்றி, மோசமான நிலையில் இருந்த கமோடார் ஹோட்டலை , க்ராண்ட் ஹையாட் ஹோட்டலாக மாற்றியதுடன், ஐந்தாவது அவென்யூவில் 68 அடுக்கு கொண்ட டிரம்ப் டவரைக் கட்டினார்.
டிரம்ப் ப்ளேஸ், டிரம்ப் உலக டவர் மற்றும் டிரம்ப் சர்வதேச ஹோட்டல் போன்ற தனது பெயரைத் தாங்கிய பல கட்டடங்களைக் கட்டினார்.

இது போன்ற டிரம்ப் டவர்கள் உலகில் மும்பை, இஸ்தான்புல் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் கட்டப்பட்டன.
ஹோட்டல்களையும் , சூதாடும் விடுதிகளையும் கட்டினார் டிரம்ப். ஆனால் அந்த நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் திவாலாகின.
கேளிக்கை வர்த்தகத்திலும் டிரம்ப் வெற்றி கண்டார். 1996லிருந்து 2015 வரை அவர் மிஸ் யுனிவர்ஸ், மிஸ் யு.எஸ்.ஏ, மிஸ் டீன் யூ.எஸ்.ஏ போன்ற அழகிப் போட்டிகளை நடத்தினார்.

2003ம் ஆண்டில் அவர் என்.பி.சி தொலைக்காட்சியில் `` தெ அப்ரெண்டிஸ்`` என்ற ரியலிட்டி நிகழ்ச்சியை நடத்தினார்.
இதில் டிரம்ப்பின் நிறுவனத்தில் நிர்வாகப் பணி புரிய போட்டியாளர்கள் போட்டி போடும் நிகழ்ச்சி காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் 14 பகுதிகளை டிரம்ப்பே நடத்தினார்.
இதற்கு இவர் தனக்கு 213 மிலியன் டாலர்கள் தரப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

பல புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார்.
நெக் டைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் விற்பனை வரை பல பொருட்கள் அவர் நடத்தும் பல நிறுவனங்களால் விற்கப்படுகின்றன.
அவரது சொத்து மதிப்பு 3.7 பிலியன் டாலர்கள் என்று ஃபோர்ப்ஸ் இதழ் கூறுகிறது. ஆனால் டிரம்ப்போ தனக்கு 10 பிலியன் டாலர்கள் சொத்து இருப்பதாகக் கூறுகிறார்

கணவர் மற்றும் தந்தை
டிரம்ப்புக்கு மூன்று முறை திருமணம் ஆகியிருக்கிறது.
அவருடைய மிகப் பிரபலமான மனைவி, அவரது முதல் மனைவியான இவானா ஸெல்னிக்கோவா என்ற செக் நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனையும், மாடலழகியும்தான்.
அவர்களுக்கு மூன்று குழந்தைகள் . பின்னர் அவர்கள் 1990ல் விவாகரத்து பெற முயன்றதை அடுத்து நடந்த நீதிமன்றப் போரில் பல பத்திரிகைகளுக்கு தீனி கிடைத்தது.

டொனால்ட் டிரம்ப் இவானாவை துஷ்பிரயோகம் செய்தார் என்பது உட்பட பல குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டார். ஆனால் பின்னர் இவானா அந்த சம்பவங்களை பெரிது படுத்தவில்லை.
பின்னர் டிரம்ப் மர்லா மேப்பிள்ஸை 1993ல் மணந்தார். அவர்களுக்கு டிஃபனி என்ற மகள். பின்னர் 1999ல் விவாகரத்து. அதன் பின்னர் 2005ல் தற்போதைய மனைவியான மெலனியா நாஸை திருமணம் செய்து கொண்டார் டிரம்ப். அவர்களுக்கு ஒரு மகன் .

முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகள் இப்போது டிரம்ப் நிறுவனத்தை நடத்த உதவுகிறார்கள். ஆனாலும், டிரம்ப்தான் இதன் தலைமை நிர்வாக அதிகாரி.

வேட்பாளர்
டிரம்ப் 1987லேயே அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஆசையை வெளிப்படுத்தினார். 2000ம் ஆண்டு அதிபர் தேர்தலில் சீர்திருத்தக்கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.
2008க்குப் பின், அதிபர் ஒபாமா அமெரிக்காவில் பிறந்தவரா என்று கேள்வி கேட்டு பிரசாரம் செய்த ‘ பர்தர்’ இயக்கத்தின் மிக வெளிப்படையாகப் பேசும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார் டிரம்ப்.

இந்த சந்தேகங்கள் எல்லாம் முற்றிலும் பொய்யாக்கப்பட்டுவிட்டன.
ஒபாமா ஹவாயில் பிறந்தவர்.
இந்த அதிபர் தேர்தலில் அந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று ஒரு வழியாக டிரம்ப் ஒப்புக்கொண்டார் . ஆனாலும் அதை எழுப்பியதற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில்தான் டிரம்ப் , அதிபர் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை முறையாக அறிவித்தார்.
அமெரிக்காவை மீண்டும் ஒரு மாபெரும் நாடாக மாற்றக்கூடிய ஒருவர் நாட்டுக்குத் தேவை என்றார் அவர் . தனது பிரசாரத்துக்குத் தேவையான பணத்தை மற்றவர்களிடமிருந்து திரட்டத் தேவையில்லாத நிலையில், எந்த ஒரு தனிப்பட்ட நலன் சாரந்த குழுவுக்கும் தான் கடமைப்பட்டவராக இருக்கவில்லை என்றும் தான் ஒரு சரியான வெளியிலிருந்து வரும் வேட்பாளர் என்றும் டிரம்ப் கூறினார்.

’’அமெரிக்காவை மீண்டும் மாபெரும் நாடாக்குவோம்’’ என்ற கோஷத்துடன் , டிரம்ப் சர்ச்சைக்குரிய ஒரு பிரசாரத்தைச் செய்தார். அமெரிக்கப் பொருளாதாரத்தை பலப்படுத்துவது, மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே குடியேறிகளை தடுக்கும் வகையில் சுவர் ஒன்றை எழுப்புவது, முஸ்லீம்கள் அமெரிக்காவுக்குள் வருவதை தற்காலிகமாகத் தடை செய்வது போன்றவை அவர் அளித்த உறுதி மொழிகள்.

குடியரசுக் கட்சியில் அவரது போட்டியாளர்களான டெட் குரூஸ் மற்றும் மார்க்கோ ருபையோ ஆகியோரின் பெரு முயற்சிகளையும் , அவரது பிரசாரக் கூட்டங்களில் நடத்தப்பட்ட பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மீறி, இந்தியானா மாநிலத்தில் நடந்த பிரைமரி தேர்தலுக்குப் பின்னர் கட்சியின் அனுமானிக்கப்பட்ட வேட்பாளராக மாறினார் டிரம்ப்.
தேர்தல் வெற்றியாளர்

டிரம்ப்பின் பிரசாரம் சர்ச்சைகள் மிகுந்ததாக இருந்து. 2005ம் ஆண்டில் அவர் பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசிய ஒளிநாடா வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் இந்தப் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்று அவரது கட்சியினரே கூறினார்கள்.

ஆனால் ஹிலரி வெல்வார் என்று தொடர்ச்சிாக வந்த கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி வெற்றி பெறுவேன் என்று அவர் தொடர்ந்து கூறிவந்தார்.

பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தி்லிருந்து வெளியே கொண்டு வர நடத்தப்பட்ட வெற்றிகரமான பிரசாரத்திலி்ருந்து தனக்கு உத்வேகம் கிடைத்ததாக கூறிய அவர் பிரெக்ஸிட் போல பத்து மடங்கு வெற்றியை தான் பெறுவேன் என்றார்.

வாக்குப்பதிவு நாள் நெருங்குகையில் அதை எந்த ஒரு அரசியல் பகுப்பாய்வாளரும் நம்பவில்லை. ஹிலரியின் மின்னஞ்சல் குறித்த புதிய சர்ச்சை காரணமாக அவருக்குக் கிடைத்த மிகத் தாமதமான ஆதரவு கூட இவர்களது நிலைப்பாட்டை மாற்றவில்லை.
இதற்கு முன்னர் எந்த ஒரு பொது பதவியையும் வகிக்காத அல்லது ராணுவத்தில் பணி புரியாத முதல் அமெரிக்க அதிபராக டிரம்ப் இருப்பார்.

ஜனவரியில் அமெரிக்காவின் 45வது அதிபராவதற்கு முன்னரே, டிரம்ப் இதன் மூலம் சாதனை ஒன்றைப் படைத்துவிட்டார்.

by-bbc
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog