Breaking

Thursday

வடக்கு மாகாண சபையினால் முஸ்லிகளை புறக்கணிக்கவில்லை....


வடக்கு மாகாண சபையினால் கடந்த 3 வருடங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களுக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமர்வின் போது கருத்து வெளியிட்ட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின், முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதற்கு எந்த நடவடிக்கையும் முதலமைச்சருடைய அமைச்சு எடுக்கவில்லை.

முஸ்லிம் மக்களுக்கான காணிகளையும் வடக்கு மாகாண சபை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் இதன்போது முன்வைத்தார்.

இதற்கு நேற்றைய அமர்வின்போது பதிலளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், 2013 இல் வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதிலிருந்து முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை பட்டியலிட்டார்.

வவுனியாவில் சாளம்பை கிராமத்தில் 272 பேருக்கும், செட்டிக்குளத்தில் சூடு வெந்த குளத்தில் பாவற்குள கிராமத்தில் 133 பேருக்கும், முசலி மருத மடுவில் 210 பேருக்கும், காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை தவிர, வேப்பங்குளத்தில் 348, கரடி குழியில் 424 பேருக்கும் பாலைக்குழியில் 238 பேருக்கும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முசலியில் பிச்சை வாணிபம் குளம், அகத்திமுறிப்பு, வேப்பங்குளம் எஸ்.பி பொற்கேணி, பி.பி பொற்கேணி, முசலியில் கபடி குழி, கொண்டைச்சியில், கயாக்குளியில் ஆகிய இடங்களிலும் முஸ்லிம் மக்களுக்கு காணி அனுமதி பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே, முஸ்லிம் மக்களை வடக்கு மாகாண சபை புறக்கணிக்கின்றது என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog