Breaking

Wednesday

ஒர் இனத்தவர் மற்ற இனத்துக்கு உதவுவதன் மூலம் நல்லிணக்கம் ஏற்படும் - பீர்சாஹிப் மக்காமில் மஹிந்த ராஜபக்ஷ


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நாட்டில் உருப்படியான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற இனத்தவருக்கு உதவியாக இருக்க வேண்டும். 

ஒரு மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் ஏனைய மதங்களுக்கு உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெவ்வேறு மதங்களை அனுஷ்டிக்கின்ற கலாசாரங்களை  பின்பற்றுகின்ற மொழிகள் பேசுகின்றவர்கள் மத்தியிலே உண்மையான சமாதானம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று ளுஹர் தொழுகை நேரத்தில் கொழும்பு பீர்சாஹிபு மக்காம் பள்ளிவாசலுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ அங்கு கூடியிருந்த ஏராளமான முஸ்லிம்கள் மத்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில்,
எமது நாட்டில் இத்துறையில் மாபெரும் சேவையாற்றியவர்தான் மறைந்த மார்க்க மேதை இஹ்ஷானியா அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர் மர்ஹும் மௌலவி நியாஸ் முஹம்மத்(கபூரி). 

அவர் ஒரு பண்மொழிப்புலவர். அவருக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம், அறபு, உருது போன்ற அனைத்து மொழிகளிலும் வல்லமை படைத்தவராகத் திகழ்ந்தார். அதன் மூலமாக சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம்களுடைய கலாசாரத்தை கொண்டு சென்றார். முஸ்லிம்கள் மத்தியில் சிங்களவர்களுடைய காலசாரத்தை அறிமுகம் செய்து வைத்தார். 

இதன் காரணமாக சிங்கள மக்கள் மத்தியிலும் அவர் பிரபல்யம் அடைந்தார். இது மிகவும் பிரபலமான விடயம். ஏனெனில் மதத்தலைவர் இன்னொரு மதத்தினருடைய அன்பையும் ஆதரவையும் பெறுவதென்றால் அது இந்த நாட்டுக்கு 

எதிர்காலத்தில் ஒற்றுமையான இலங்கையை உருவாக்குவதற்கு வாய்ப்பாக அமையும். மர்ஹும் நியாஸ் மௌலவி செய்த சேவையினை நாம் ஒரு காலமும் மறந்து விட முடியாது. அவர் என்னுடைய ஆலோசகர் என்ற முறையில் எனக்கு மாத்திரம் அல்ல, ஊர் ஊராகச் சென்று, அனைத்து நாட்டு மக்கள் மனதில் இடம் 

பெறத்தக்க வகையிலே சிறப்பாகப் பணியாற்றினார். இவ்விதமான சமயப் பெரியார்கள். இந்த நாட்டிலே வர வேண்டுமென்பதுதான் என்னுடைய பிரார்த்தனை என்றும் தெரிவித்தார்.

இதன் போது, இஹ்ஷானிய்யா அரபுக் கல்லூரியின் மாணவர்கள், பைத் பாடி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மௌலவி நியாஸ்  முஹம்மதின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். 

அங்கே அண்மையில் மறைந்த அவரது சகோதரர் சம்சுத்தீன் தமிஸ்தீனின் மறைவு குறித்து அவரது பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி ரத்நாயக்க, முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், நகீப் மௌலானா, மாளிகாவத்தை முஹம்மத் சௌக்கத், முஹம்மது முபாரிஸ், சட்டத்தரணி ரசீட் .எம். இம்தியாஸ் உட்பட பெருந்தொகையான பொதுமக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.    

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog