Breaking

Friday

கிழக்கு ஆளுநருடனான சந்திப்பு வெற்றி! அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிப்பு!


(காரைதீவு  நிருபர் சகா)

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவினுடனான சந்திப்பு மிகுந்த திருப்தியையும் வெற்றியையும் அளித்துள்ளதாக அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்முஸ்லிம் பட்டதாரிகள் அமைப்பின் செயலாளர் கே.சுரேஸ்குமார் தெரிவித்தார்.

நேற்று  (1.11.2017) புதன்கிழமை  கிழக்கு மாகாண ஆளுனர்  அலுவலகத்தில் பிற்பகல் 3மணிமுதல் முதல் 4மணிவரை சுமுகமாக இச்சந்திப்பு இடம்பெற்றது.

ஆளுநருடன் ஆளுநரின்செயலாளர் அசங்கஅபேவர்த்தன பிரதிச்செயலாளர் திருமதி எஸ்.முரளிதரன் உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அம்பாறைமாவட்டத்திலிருந்து 60 பட்டதாரிகள் இச்சந்திப்புக்கென திருமலை சென்று ஆளுநரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினர்.



 இதில் கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனம் தொடர்பாக பல முடிவுகள் எட்டப்பட்டன.

156நாட்களுக்கும் மேலாக போராட்த்திலீடுபட்ட பலருக்கு நேர்முகஅழைப்புக்கடிதங்கள் கிடைக்கப்பெறவில்லை. எனவே அனைத்து 2468 பட்டதாரிகளுக்கும் நேர்முகப்பரீட்சைகடிதங்கள் அனுப்பப்படவேண்டும்.

அதிலும் பலர் 35வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களுக்கு மத்திய அரசின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி கிடைக்காது. எனவே பெருமனதுகொண்டு 35வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளையும் உள்ளீர்க்க ஆவனசெய்யவேண்டும் எனப் பட்டதாரிகள் வேண்டுகோள்விடுத்தனர்.மேலும் பட்டம்பெற்ற ஆண்டு அடிப்படையில் தேர்வு இடம்பெறுதல் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

போட்டிப்பரீட்சையில் 40புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து  2868 பேருக்கும்  நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட உள்ளதாகவும் இதில் 1440 பேரை முதலில் நியமிக்க உள்ளதாகவும் ஆளுநர்  தெரிவித்தார்.

இந்த 1400 பேரில் 300சிங்களமொழிமூல பட்டதாரிகளும் மீதி1100 தமிழ்மொழிமூலப்பட்டதாரிகளும் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

அப்படியானால் மீதி பாதிக்கப்படும் 1468 பட்டதாரிகளை என்னசெய்வது. அவர்களுக்கும் நியமனம் வழங்கப்படவேண்டும் என பட்டதாரிகள் கேட்டதற்கு முதலில் 1400பேரையும் பின்னர் எஞ்சியவர்களுக்கு அரசாங்கத்தினது அனுமதிபெற்று வழங்க நடவடிக்கை எடுக்கலாமென தெரிவித்தார்.

தங்களின் கோரிக்கைக்கு இணங்க நடை பெற இருக்கும் ஆசிரியர் நேர்முக பரீட்சையில் வயது மூப்பு அடிப்படையிலும் பட்டம் பெற்ற திகதி அடிப்படையையும் கருத்திற் கொண்டு நேர்முக பரீட்சை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

ஆங்கில உயர்தேசிய டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர்களுக்கு பரீட்சை இல்லாமலே தற்போது நேர்முகப்பரீட்சை நடைபெற்றுள்ளது. இது இலங்கை ஆசிரியர்சேவை பிரமாணக்குறிப்பிற்கு முரண் இல்லாவிடில் எங்களையும் பரீட்சையின்றி இணைத்துக்கொள்ளலாம்தானே என்று பட்டதாரிகள் கேட்டனர்.

அதற்கு மேலும் எதிர் வரும் காலங்களில் போட்டிப்பரீட்சையின்றி பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்க பரிசீலனை செய்யவுள்ளதாகவும் உறுதியளித்தார்..
இதனடிப்படையில் எமது சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக செயலாளர் சுரேஸ்குமார் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog