Breaking

Wednesday

தேசிய காங்கிரஸ் ஜனாதிபதியோடு சந்திப்பு..!


(எம்.ஜே.எம்.சஜீத்)


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக்  கூட்டம் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அவருடைய இல்லத்தில் நேற்று 2017.11.20ஆம்திகதி நடைபெற்றது.  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தேசிய காங்கிரஸ் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு காத்திரமான வரலாற்றுப் பங்களிப்பைச் செய்திருக்கிறது.

 நேற்று மாலை 7.30 இற்கு ஜனாதிபதியின் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் பங்காளிக் கட்சிகள் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றிக் கலந்துரையாடின.

அவ்வேளை, புதிதாகக் கொண்டு வரப்படவிருக்கும் யாப்பு தொடர்பான தனது அதிருப்தியை தேசிய காங்கிரஸ் வெளியிட்டது. மூன்று இனமும் நாட்டில் சந்தோசமாக வாழ்வதற்கான யாப்புத் திருத்தம் ஒன்று பற்றி இந்த வரலாற்றுக் காலத்தில் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தையும் தேசிய காங்கிரஸின் தலைமை அழுத்திக் கூறியது. 

கட்சியின் பாலமுனைப் பிரகடனத்தின் நோக்கம் பற்றியும் அதன் கருத்துக்கள், எதிர்பார்ப்புகள் பற்றியும் கூட்டத்தில் விளக்கிக் கூறிய தலைவர் அதாஉல்லா புதிதாக கொண்டுவரப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல் முறையானது சிறுபான்மை மக்களை மிகவும் பாதித்திருப்பதாகவும் எடுத்துக் கூறினார். தேர்தல் முறையானது இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கூறிய தலைவர் அதாஉல்லா பிரகடனத்தின் பிரதியொன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்தார். ஜனாதிபதியின் தலைமையில் கூடவிருக்கும் குழுவினுடைய பரிசீலனைக்காக அது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பிரதமர் பதவிக்காலம் நாட்டிற்குப் பெரும் துரதிஸ்டமானது என்றும், நாடுமுழுவதும் கலவரங்களும், பிரச்சினைகளும் வித்திடப்படுகின்றன என்றும் தேசிய காங்கிரஸின் தலைமை அங்கு சுட்டிக் காட்டியது. இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தூபமிடும் குழுவினது தொடர்ச்சியான செயற்பாடுகள் பற்றியும் அதன் கடைசிப் பதிவாகிய ஜின்தோட்டைச் சம்பவம் பற்றியும் தலைவர் அதாஉல்லா எடுத்து விளக்கினார்.

இந்துத்துவவாத அடிப்படையின் கீழும் முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கே விதைக்கப்பட்டுவரும் துவேசங்கள் தொடர்பாகவும், கடைசியாய் இடம் பெற்ற வவுனியா கடை எரிப்பு தொடர்பாகவும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது. இலகுவாகத் தீர்வுகளைக் காணக் கூடியதான வட்டமடு, கராங்கோ காணிகள், நுரைச்சோலை வீட்டுத் திட்டம், வில்பத்து முதலான பிரச்சினைகள் அரசியல் இலாபம் பெறுவதற்காக மாற்றப்பட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டி ஏற்பட்டது.

 மற்றும் இன்று பேசுபொருளாக மாறியுள்ள கல்முனை மாநகர சபை நான்கு சபைகளாகப் பிரிக்கப்பட வேண்டியதன் அவசியம் சம்பந்தமாகவும் எடுத்துரைக்கப்பட்டதோடு, அவ்விடயமும் அரசியல் இலாபங்களுக்காகவே மக்கள் பாதைகளில் இறங்கிப் போராடுவது வரலாற்றில் ஒரு துன்பச் செயல் எனவும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது.

நாட்டை முறையாக வழிநடத்துவதாக இருந்தால் கருத்து ரீதியாக பிரிந்து செயற்படுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உட்பூசல்கள் நிறுத்தப்பட்டு, ஜனாதிபதி என்கின்ற அடிப்படையிலும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவ்வாறாயினும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற கருத்தினை தேசிய காங்கிரஸ் தங்களது தாய்க்கட்சி என்கின்ற அடிப்படையில் கரிசனையோடு வலியுறுத்தியது. 

இதன் மூலமே நாட்டில் பழம் பெரும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் நாட்டையும் வாழவைக்க முடியும் என்றும் தேசிய காங்கிரஸ் கூறத்தவறவில்லை. அந்த வரலாற்று செயற்பாடுகளுக்காக UPFA இல் அங்கம் வகிக்கும் தலைவர்களைக் கொண்ட குழுவொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டுமெனவும் தேசிய காங்கிரஸின் தலைவரால் எடுத்துக் கூறப்பட்டது.

தேசிய காங்கிரஸின் கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள் இக்கருத்துகளுக்கு உடன்பட்டு அதனை வரவேற்றார். கட்சியினர்களோடு தனிமையாகப் பேசுகி;ன்ற பொழுதும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்குவதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிக்கு முறையாகத் தலைமை கொடுத்து இப் பிரச்சினைகளை எமக்குள் பேசித் தீர்வினைக் கண்டு நம் நாட்டு மக்களை நிம்மதியாக வாழ வைக்குமாறும், அதன் மூலம் வரலாற்று நாயகனாக மாற வேண்டுமென்றும் எல்லோருடைய மனங்களையும் தொடும்படி கூட்டத்தில் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இச்சந்திப்பில் டாக்டர். உதுமாலெப்பைபிரதிச் செயலாளர் நாயகம் முனானள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தேசிய அமைப்பாளர் ஜே.எம். வஸீர் பொருளாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog