Breaking

Sunday

காரைதீவு பிரதேசசபையை சுயேட்சைக்குழுவே கைப்பற்றும். மாகாணசபையை போன்று பிரதேசசபையையும் தாரைவார்க்க கூட்டமைப்பு முயற்சி.!


(காரைதீவு  நிருபர் சகா)

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் காரைதீவு பிரதேசசபையின் அதிகாரத்தை ஊர்த் தீர்மானத்தை ஏற்று களமிறங்கிய  சுயேட்சைகுழு கைப்பற்றும். இதில் எவ்வித சந்தேகமுமில்லை.இதன்மூலம் காரைதீவு மண்ணின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவோம்.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபைக்கு சுயேட்சைக்குழு-01 இன் சார்பில் 7ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே.குமாரசிறி தெரிவித்தார்.

 அவர் அவரது வட்டார மக்களைச்சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறினார். அவருடன் மற்றைய வேட்பாளர் மா.புஸ்பநாதனும் உடனிருந்தார்.

அங்கு குமாரசிறி மேலும் பேசுகையில்:

 காரைதீவு மண்ணின் இறைமையை கருத்தில் கொண்டு எமது மண்ணை நாங்களே ஆளவேண்டும் எனும் நோக்கோடும் இம்மண்ணை சிறந்தமுறையில்அபிவிருத்தி மூலம் கட்டியெழுப்ப வேண்டுமென்பதற்காகவும் அத்தனை கட்சிகளும் ஒன்றிணைந்து ஒருகுடையின் கீழ் சுயேட்சையாக போட்டியிட இம்மண்ணின் அரசியல் முக்கியஸ்தர்கள் ஆதரவு வழங்கினார்கள்.

 ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் அதிகாரத்திற்காகவும் தங்களின் இருப்பிற்காகவும் எமது மண்ணின் தீர்மானத்திற்கு எதிராக தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஒற்றுமையைக் குழப்பியவர்களும் அவர்களே.

சிலவேளை சபை மாற்றான்கைக்குப்போனால் அதற்குரிய ஒட்டுமொத்த பொறுப்பையும் பழியையும் துரோகத்தையும் அவர்களே ஏற்கவேண்டும்.

கடப்த 2015 ம் ஆண்டு ஜனவரி எட்டு முதல் இணக்க அரசியல் என்ற போர்வையில் தமிழ்மக்களை மாற்றுச்சமூகத்திற்கு விற்ற வரலாற்று துரோகங்களே இவர்களால் செய்யப்பட்ட சாதனைகளாகும்.

 தமிழன் ஆண்ட கிழக்கு மாகாணசபையை  அரசியல் பலமிருந்தும் மாற்றுச்சமூகத்திற்கு தாரைவார்த்ததைப்போன்று காரைதீவு பிரதேசசபையில் போட்டியிடுவதன் மூலம்வாக்குகளை சிதறடித்து மாற்றானுக்கு ஆட்சியை கொடுப்பதற்கு முயற்சிக்கின்றனர். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு விபுலமண்ணின் கல்விச்சமூகம் அவ்வளவு முட்டாள்களல்ல.

 இந்த சபையின்ஆட்சியை மட்டும் எங்களிடம் விட்டுத்தாருங்கள் அப்போதுதான் இந்த மண்ணை எங்களால் பூரணமாக கட்டியெழுப்ப முடியும் எனவும் எதிர்வரும் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை தேர்தல்களில் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குகின்றோமென அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் காரைதீவின் புத்திஜீவிகள் எடுத்துரைந்திருந்தனர்.ஆனால் அவர் அனைத்தையும் உதாசீனப்படுத்தியிருந்தார்.

 சரி காரைதீவை விட்டுக்கொடுக்காத அவரால் சம்மாந்துறையையும் ஆலையடிவேம்பையும் காப்பாற்றமுடியாமல் போய்விட்டதே. இதற்கு அவர் என்ன சொல்வார்? அது தான் இறைநீதி. அங்கெல்லாம் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. காரைதீவில் கேட்டுத் தோல்வி அடைந்த வரலாறு படைக்கப்படப்போகிறது. அல்லது ஒற்றுமையைக்குழப்பி சபையை மாற்றானிடம் தாரைவார்த்த வரலாறு படைக்கப்படப்போகிறது. இதனை அவரும் அவர் சார்ந்தவர்களும் ஏற்றேயாகவேண்டும்.

பிரதேசசபையின் வேட்புமனுவைகூட ஒழுங்காக கையளிக்க முடியாத இந்த பாராளுமன்ற உறுப்பினரின் நிகழ்ச்சிநிரலிற்குப் பின்னால் எமதுமண்ணின் ஒருசிலர் செயற்படுவது வேதனையாகவுள்ளது. தேர்தல் முடிந்ததும் வெள்ளை வாகனத்தையோ சிவப்பு வாகனத்தையோ இந்தப்பக்கமும் காணமுடியாதுபோகும் என்பதை இவர்கள் அறியாதது கவலைக்குரியது.

மறுபக்கம் பணத்திற்கும் லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் பேர்போன பேர்வழிகள் வெறும் பொய்அறிக்கைப்போரில் இறங்கி மக்களைக்குழப்பப்பார்க்கிறார்கள். இனி அவர்கள் வருவதற்கு சின்னமே இல்லை என்றளவிற்கு கொள்கையில்லாத அவர்களிடம் சபையை பங்கிடுவதா? அனைத்தும் சுயலாபம். எதுவுமே சரிவராது.

தேர்தல் முடிந்ததும் ஆலையடிவேம்பிற்கும் வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் சென்றுவிடுவார்கள். மக்களோடு மக்களாக நிற்பவர்கள் இந்த சுயேச்சைக்குழுவினர் மட்டுமே என்பதை மக்கள் அறிவார்கள்.

 எது எவ்வாறு இருப்பினும் எமது மக்கள் ஒற்றுமையின் குரலாக மண்மானம் காக்கும் தன்மானத் தமிழர்களாய் மீன் சின்னத்திற்கு ஆதரவளித்து சுயேட்சைகுழு-1 ஐ ஆட்சிபீடம் ஏற்றுவார்கள் என்பது உறுதி.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog