Breaking

Friday

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தைத் தவிர வேறு எந்த பேரினவாத கட்சிகளுக்கும் வாக்களித்த வரலாறு இல்லை.


காரைதீவு  நிருபர் சகா 
கல்முனை வாழ் தமிழ் மக்கள் மாற்று இனத்தவர்களால் அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இம்மக்களைப்பற்றி அணுவளவேனும் சிந்திக்காதவர்கள் இன்று தேர்தல் என்றவுடன் மக்கள் மத்தியில் வந்து அதனைச் செய்து தருவேன் இதனைப் பண்ணிப் படைப்பேன் என்றெல்லாம் பேசி வாக்குப்பிச்சை கேட்கின்றனர். இவர்கள் மக்கள் துன்பப்பட்ட போது எங்கிருந்தார்கள்? என்று பகிரங்கமாகக் கேட்கின்றேன். 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களாக நற்பிட்டிமுனை 9 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரும் ஓய்வு பெற்ற பிரதம இலிகிதருமாகிய தி.இராஜரெத்தினத்தின் தேர்தல் பிரசார பணிமனை திறப்பு விழா எஸ்.எஸ்.நாதன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரப் பணிமனையை திறந்து வைத்த பின்னர் அவர் அங்கு மேலும் பேசுகையில்,
நற்பிட்டிமுனைக் கிராமம் என்பது வன்னிமைகள் ஆட்சி செய்த தொண்மை வாய்ந்த கிராமமாகும். இக்கிராம மக்கள் தமிழ்த் தேசியத்தைத் தவிர வேறு எந்த பேரினவாத கட்சிகளுக்கும் அவர்களின் முகவர்களாக உலாவரும் சுயேட்சை அணியினருக்கும் வாக்களித்த வரலாறு இல்லை. இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தைத் தவிர வேறு எந்தச் சின்னத்திற்கும் இவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

இவ்வூரில் பிறந்து தமிழ்த் தேசியத்தினூடாக அரசியலுக்குள் பிரவேசித்த நான் பிறந்த மண்ணுக்கு என்னால் இயன்ற சேவைகளைச் செய்துள்ளேன். இறைநாட்டம் இருந்தால் எதிர்காலத்திலும் பல சேவைகளைச் செய்யவுள்ளேன். சில வருடங்களுக்கு முன்னர் எமது மக்களின் தீர்த்தக் கரையில் விலங்குக் கழிவுகளை கொண்டுவந்து கொட்டிய போது தன்னந்தனியனாக நின்று பொலிஸாரின் உதவியுடன் அதனை தடுத்து நிறுத்தினேன். அதே போன்று சிவசக்தி சனசமூக நிலையம் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரயாக்கப்பட்டது. 

இந்த நாசகாரச் செயலைப் புரிந்தவர்களை கல்முனைப் பொலிஸாரின் உதவியுடன் கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொடுத்தேன். இத்தருணத்தில் கல்முனைப் பொலிஸாருக்கு நன்றி கூறக் கட்மைப்பட்டுள்ளேன். எமது மக்களுக்கு அநீதி இளைக்கப்படும் போது மாற்றுக்கட்சிகள் மூலம் தமிழரின் வாக்குகளை சூறையாட வருகின்ற நபர்கள் எங்கிருந்தார்கள் என்று கேட்கவிரும்புகின்றேன்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog