Breaking

Sunday

சம்மாந்துறை இடப்பெயராய்வு - மீச்சிறு குறிப்பு....!


வந்தாரை வாழவைக்கும்
வாழ்மனையாரைத் துங்க வைக்கும்
சிங்கார மட்டக்களப்பாம்
சம்மாந்துறை

சம்மாந்துறை இலங்கையின் தென்கிழக்கே தனித்துவமிக்க கேந்திர நிலையத்தில் அமைந்துள்ளது. புராதன இலங்கையின் கிழக்கிலிருந்தான கண்டிக்கான பிராதன ஐந்து காட்டுவழிப்பாதைகளின் தரைத் தொடர்பு இவ்விடத்தில் ஆரம்பமாகின்றது.

இந்நிலத்தின் அடையாளப் பெயர்கள் வரலாற்று பெறுமதியுடையவை.

அது பற்றிய ஒரு ஒரு மீச்சிறு குறிப்பே இவ்வாக்கம்.

கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் தரவுகளின் அடிப்படையில்
சம்மாந்துறைப் பிரதேசம் ஆரம்பத்தில் சம்மாந்துறை என்று அழைக்கப்படவில்லை. மட்டக்களப்பு என்றே அழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பின்பு பார்க்கலாம்

“அன்னிய தேசவாசிகள் கண்டபாணத் துறையில் மரமேற்றிய காலம், இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று படையெடுத்து வந்த இந்தியாவை சேர்ந்த முற்குகர்கள் இலங்கையின் கீழ்பாகத்திலுள்ள சதுப்பேரியூடாக தமது ஓடத்தைச்செலுத்தி மண்முனை வரைசென்று பின் மண்முணையிலிருந்து தென்திசை நோக்கி ஓடத்தைச்செலுத்தி வாவியின் எல்லை வரை ஓடம் சென்றதும், அதற்கப்பால் செல்ல வழியில்லாமை கண்டு 'இது மட்டும் மட்டடா மட்டக்களப்படா' (இந்தக் களப்பு இதுவரையும் தான்) எனப் பகர்ந்து, அதன் அந்தத்தில் மட்டக்களப்பு எனும் நாமத்தைச்சூட்டி ஒரு கிராமத்தை அரணாக்கினர். ஒல்லாந்தர் காலம் வரையும் வாவியின் தென் எல்லையே மட்டக்களப்பு என அழைக்கப்பட்டது' என்றும்

'ஒல்லாந்தர் கோட்டை கட்ட வசதியான இடத்தை ஏற்படுத்திய பின்னரே வடபகுதியும் மட்டக்களப்பு என அழைக்கப்பட்டது' இது மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்ற செய்தி

தற்போதைய மட்டக்களப்பின் முந்தைய பெயர் புளியந்தீவு என்பதாகும்.

மேலும் சம்மாந்தறை அடங்குகின்ற பிரதேசத்தைப் பற்றி தொலமியின் வரைபடக்குறிப்பு மற்றும் ஐரோப்பியர்கள் குறிப்பிட்ட வேறு பெயர்களும் இருக்கின்றன.

நிற்க

சம்மாந்துறையின் ஊர்ப்பெயராய்வு தொடர்பில்

சைமன் காசிச் செட்டி
Donald Ferguson - 1927
வீ.சி.கந்தையா - 1964
எஸ்.ஓ.கனகரத்தினம் முதலியார் -1921
வெல்லவூர் கோபால் -2005
ம.சற்குணம் - 1998
ஏ.பி.எம்.இத்ரீஸ் - 2011 
மருதூர் ஏ.மஜீட்- 1995
மானா மக்கீன் -1998
இ.பாலசுந்தரம் - 2001 போன்ற பல அறிஞர்களின் ஒருமித்த கருத்து

சம்மாந்துறை என்ற பெயர் சம்பன் என்கின்ற இரு அந்தங்களிலும் தேள்போன்று வளைந்த தோணி அல்லது படகு போன்ற மரக்கலத்தின் பெயரிலிருந்து தோன்றியது என்பதாகும்.

இந்தச் சொல் கந்தோனீஸ் மொழியிற் தோன்றினாலும்
போதுவாக தூரகிழக்காசிய நாடுகளிற் பயன்படுத்தப்படும் வள்ளங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. பின்னர் இது மலாய் மொழியூடாக வர்த்தகர்களினால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

சம்மாந்துறையின் வடமுனையில் தற்போது சேறடர்ந்துள்ள மட்டக்களப்பு வாவியின் தென் அந்தமான அல்லைச்சதுப்பு நிலப்பகுதி சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை ஆழம் குறைந்த களப்புப் பகுதியாக இருந்திருக்கின்றது என்பதும், இவ்விடம் படகுத்துறையாக வர்த்தக நோக்கிலும் யாத்திரை நோக்கிலும் பயன்பட்டிருக்கின்றது என்பது வரலாற்றாவணங்களின் வழிவந்ததும், தரைத்தோற்றவியல் ஆய்வுகளின் முடிவுமாகும்.

மேலும் ஹம்பந்தோட்டை பிரதேசத்தின் பெயரும் 
இதன் சிங்கள பிரதியீடு என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். ஹம்பன் என்பது சம்பன் என்பதன் சிங்களவடிவமாகும்.

இச்சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதே சம்பன்காரார்
ஹம்பன்காரய, ஹம்பன்மினிஸ்ஸு போன்றவையும் 
தென்கிழக்கில் முஸ்லிம்களிடம் இருக்கின்ற சம்பானோட்டி குடி என்கிற தாய்வழி குலமரபு பெயருமாகும்.

என்றாலும், சம்மாந்துறையின் நெற்செழுமையும், செம்மண்வளமும், ஆலையடிச்சந்தையின் புராதன செல்வாக்கும், 
சம்பா நெல், செம்மண், பொருட்கள் என்று பொருள்படுகிற சாமான் என்ற சொற்களின் ஒலியொற்றுமையும் சம்மாந்துறை என்ற சொல்லோடு பெருமளவு ஒத்திசைப்பதால் இவையும் பெயர்க்காரணிகளாக ஊகிக்கப்படுகின்றன. ஆனால் இவை வலுக்குறைந்த எடுத்துக்காட்டுகளாகும்.

ஏனெனில் இதுவரை அவதானிக்கப்பட்ட ஆவணங்களில் சம்மாந்துறையின் பெயர் 
15 வடிவங்களில் ரோமானிய எழுத்துக்களிலும்
4 வடிவங்களில் தமிழ் எழுத்துக்களிலும்
2 பேச்சுவழக்கு வடிவங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் 
சாமான் - சாமாந்துறை, சாமந்துறை, சாமான்துறை
சம்பா - சம்பாத்துறை, சம்பாதுறை
செம்மண்- செந்துறை, செம்மண்துறை, சேமந்துறை, செம்மாண்துறை, செம்மந்துறை

போன்ற வாய்ப்புக்களில் எதுவும் இடம்பெறவில்லை

ஆனால்

சம்பான் - சம்மான் என இரு உச்சரிப்புகளையுடைய 
சொல்லிற்குப் பொருந்துவதாகவே பிரயோகத்திலிருந்ததும், இருக்கின்றதுமான பெயர்கள் அமைகின்றன.

சம்பாந்துறை - 1605-04-29 சம்பாந்துறைச் செப்பேடு
சம்மான்துறை - திருக்கோயிற் செப்பேடு
சம்மந்துறை - 1907 புயற்பாவியம்
சம்மாந்துறை - தற்போதைய பயன்பாடு

இது போன்றே ரோமானிய எழுத்துக்களிலும் இடம்பெறுகின்றது

ZABANDURE 
SAMPANTURAI 
CHAMMANTURAI 
CHIAMPANTURE 
SHABANDURE
SAMANTURE - 1672
SAMMANTURE
SAMMANTURAI
SAMANTURAI
SAMMATURE - 1672
SJAMPANTURE
SIAMBANDURE - 1620
SIAMBAMDURE
SIAMPANDOERE - 1767
SAMMANTORRE 
SAMMANTHURAI - 1921

ஏறத்தாள 30 மொழிகளில் சம்பான் என்பது 
sampan, sampana, sampaani, sampang, szampan, sampanas, campah, hampan, sammaan champana, champan, siampan, sampan, champones, hambana என பலவாறு உச்சரிக்கப்படுகின்றது.

ஆக பிற ஊகங்களைவிட சம்பான் என்ற சொல்லில் இருந்தே சம்மாந்துறை என்ற ஊர்ப்பெயர் உருவாகியிருக்கும் என்பதே ஆய்வுநோக்கிற் பொருத்தமான முடிவாகும்.

- இவண் ஆவணன்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog