Breaking

Monday

சிரியா - ஒரு பார்வை...!


அரேபிய நாடுகளின் வரிசையில் சிரியா இன்று முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கு அங்கு நடைபெற்று வரும் மக்கள் கிளர்ச்சியும் அதற்கெதிரான அரசு இயந்திரத்தின் அடக்குமுறையும் காரணம். உலகின் போலிஸ்காரனாகத் தன்னை உருவகப்படுத்திக் கொண்டு ஆனால் போலிசாக இல்லாமல் பொறுக்கியாகச் செயல்படும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளும், ஐரோப்பியா போன்ற மேற்குலக நாடுகளும், அரேபிய அரசுகளும் கடந்த 16 மாதங்களாக எதுவும் செய்ய இயலாமல் கையைப் பிசைந்து கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் தான் இருக்கிறது - சிரியாவின் சிக்கல் வித்தியாசமானது

துனிசியாவில் மக்கள் போராட்டம் வெடித்துக் கிளம்பியபோது அது பெரும் மக்கள் புரட்சியாக அரசைத் தூக்கியெறியப் போதுமானதாக இருந்தது. போராட்டம் துவங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே ஸினே அல் அப்தீன் பின் அலியின் ஆட்சி முடிவுக்கு வந்து அவர் சவுதி அரேபியாவுக்குத் தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதைப்போன்றே எகிப்திலும் முபாரக்கின் ராணுவ ஆட்சிக்கெதிரான போராட்டம் புதிய மக்களாட்சிக்கு வித்திட்டது. 

கிட்டத்தட்ட 18 நாட்களில் தெருவில் இறங்கிப் போராடிய மக்கள் கூட்டத்திற்கெதிராக ஹோஸ்னி முபாரக்கால் தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏமனில் நடந்த போராட்டம் மக்களைக் காவு வாங்கியபோதும் கடைசியில் அரசுக்கட்டிலில் இருந்தவர்கள் எதிர்க்கட்சிகளோடு இணைந்து செயல்படவும் அதிகார மாற்றம் ஏற்படவும் காரணமாக அமைந்தது. ஏமனின் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலேஹ் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி ஆட்சியை விட்டிறங்கினார். 

லிபியா போராட்டம் வேறு விதமாக அமைந்தது. இப்போதைய சிரிய அதிபர் அஸார் அல் அஸ்ஸாதைப் போலவே லிபிய அதிபர் கடாஃபி மக்கள் போராட்டத்தைக் கண்டுகொள்ள முன்வரவில்லை. இங்கும் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பெருமளவில் மோதல் நடைபெற்றது. கடாஃபியின் ராணுவம் மக்களுக்கெதிரே தாக்குதலை நடத்தி அரசை ஆட்சியில் அமர வைக்க முயன்றது. கிட்டத்தட்ட எட்டு நீண்ட மாதங்களுக்குப் பின் கடாஃபியே கொடூரமாகக் கொல்லப்பட்டதோடு லிபியாவின் நீண்ட முடியாட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் லிபியாவின் போராட்டத்தில் மற்ற மூன்று நாடுகளில் நடந்த போராட்டத்தோடு ஒப்பிட முடியாது. 

மக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவம் முன்வந்ததால் போராட்டக்காரர்களுக்கு உதவ நேடோ நாடுகள் தாராளமாக முன்வந்தன. லிபியாவில் போராட்டக்காரகளுக்கு ஆதரவாக குண்டு மழை பொழிந்தன. போராட்டக்காரர்களுக்கு ஆயுதங்கள் தந்துதவின. ஜனநாயக மல்ர்ச்சிக்காகத்தான் நேடோ நாடுகள் இத்தனை மெனக்கெட்டன என்று யாராவது சொன்னால் சிரித்து விட்டுப் போவதைத் தவிர வழியில்லை. மற்ற மூன்று நாடுகளை விடவும் லிபியாவில் எண்ணெய் வளம் அதிகமென்பதையும் எனவே உதவி வராமல் போனால்தான் ஆச்சரியமென்பதையும் தனியே சொல்ல அவசியமில்லை.

ஆனால், சிரியாவில் மக்கள் கிளர்ச்சி துவங்கி ஒன்றரையாண்டுகள் நெருங்கும்போதும் அரசிற்கெதிரான போராட்டம் இன்னமும் வெற்றிக்கான அறிகுறியைக் கூடக் காண முடியவில்லை. ஏன்? ஏனெனில் ஓர் அமெரிக்கப் பத்திரிகைக்கு சிரியாவில் போராட்டம் துவங்குவதற்குப் பல காலம் முன்பாக அதன் அதிபர் பஸார் சொன்னதைப் போல 'சிரியா வித்தியாசமானது'.. அன்று அவர் சொன்னதை உணராதவர்கள் கூட இன்று அவர் சொன்னதன் பொருளை உணர்ந்திருப்பார்கள். 

உண்மையிலேயே துனிசியா, எகிப்து, ஏமன், லிபியா நாடுகளை விட சிரியா வித்தியாசமானதுதான். இதன் பொருள் சிரியா பெரும் ஜனநாயகத்தன்மையும், தாராளமயமும் கொண்ட அரசாட்சியின் கீழ் இருக்கிறதென்பதல்ல.. அல்லது மக்கள் தூக்கியெறிய வேண்டிய அளவிற்கு அஸாத்தின் ஆட்சி மோசமானதல்ல என்றும் பொருள் கொள்ள வேண்டாம்.. மாறாக மற்ற நாடுகளின் ஜனநாயகப் புரட்சிக்கும் சிரியாவின் மக்கள் போராட்டத்திற்கும் இடையே மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறதென்பதுதான். எப்படி என்கிறீர்களா? 

 மிக முக்கியமான வித்தியாசம் சிரியாவின் மக்கள் போராட்டத்திற்கு உதவ உலக நாடுகளிடையே ஒற்றுமையான ஒருமனதான திட்டம் ஏதுமில்லை என்பதுதான். ஏனெனில் உலக நாடுகளின் உதவி இல்லாமல் போராட்டக்காரர்கள் வெற்றி பெற முடியாத அளவிற்கு இராணுவம் அடக்குமுறையில் ஈடுபடுகிறது. துனிசியாவில் மக்கள் தெருவில் இறங்கியபோது அவர்களுக்கெதிராக அல்ல மாறாக அவர்களுக்குத் துணையாக இராணுவம் செயல்பட்டது. எகிப்தில் மக்களுக்கெதிராக தனது டாங்குகளைத் திறக்க எகிப்திய ராணுவமும் தயாராகவில்லை. 

ஏமனில் அரசுக்கு ஆதரவாக இராணுவம் இருந்தபோதும் அது முழுமையானதாக இல்லை. வளைகுடா நாடுகளின் அழுத்தம் அங்கே மாறுதலுக்கு வழிவகுத்தது எனவே மக்களுக்கு பாதிப்பு அதிகம் இல்லை. லிபியாவில் இராணுவம் மக்கள் மீது பாய்ந்ததும் நேடோ நாடுகள் காத்திருந்த சந்தர்ப்பத்தை மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டன. ஆக, ஏதேனும் ஒருவகையில் வெளி உலக ஆதரவுடனேயே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சிரியாவில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதுதான் சிரியா வித்தியாசப்படுவதன் அடிப்படை

நீண்ட இந்த மக்கள் போராட்டம் சிரிய இராணுவத்தில் சில ஆயிரம் வீரர்களிடையே மாற்றம் விதைத்திருந்தாலும் இராணுவத்தில் முழுமையான சிதைவு ஏற்பட்டு விடவில்லை. சொந்த மக்கள் மீதே துப்பாக்கிச் சூடும், டாங்குகள் மூலம் தாக்குதலும் நடத்தும் குரூரமான அரசு சார்ந்த இராணுவமாகவே சிரிய இராணுவம் இன்றும் செயல்படுகிறது. ஆனால் இது மட்டுமே வித்தியாசமென்று சொல்லி விட முடியாது. இரான், சீனா, ரஷ்ய நாடுகள் தங்களளவில் சிரிய இராணுவத்திற்கு ஒத்துழைப்பு தருவதன் மூலம் பஸாரின் ஆட்சி தூக்கியெறிந்து விடப்படாமல் இருக்க மறைமுகமாகவும் நேரடியாகவுமே உதவுகின்றன.

குறிப்பாக ரஷ்யாவும் சீனாவும்  ஐக்கிய நாடுகள் என்ற கோமாளி அமைப்பின் பாதுகாப்பு சபையில் தங்களது வீட்டோ அதிகாரத்தை ஒருமுறையல்ல - மூன்று முறை பயன்படுத்தி சிரியாவின் மீதான இராணுவ தாக்குதலைத் தவிர்க்கச் செய்துவிட்டன. இரானோ சிரிய பிரச்னையை வேறுவிதமாகக் கணக்கிடுகிறது. பூகோள ரீதியாக சிரியாவின் இருப்பு தனக்குச் சாதகமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அது உணர்ந்திருப்பதால் தனது நீண்ட நாள் நண்பனை அரவணைத்தேயாக வேண்டிய நிலையில் அது இருக்கிறது. மட்டுமல்ல. 

சிரியாவை ஆதரிப்பதன் மூலம் தனது பரம வைரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆசனத்தில் கடுப்பைக் கிளப்பக் கிடைத்திருக்கும் வாய்ப்பை அதுவும் பயன்படுத்திக் கொள்கிறது.(இஸ்ரேலும் இதனையே சாக்காக வைத்துக் கொண்டு ஐரோப்பிய யூனியனுடனான தனது நெருக்கத்தை இன்னமும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறதென்பது தனியாகப் பேசப்பட வேண்டிய துணைக்கதை)

 துண்டாடப்பட்ட நிலைக்குப் பின் சர்வதேச அரசியலில் தன்னை நிலைநிறுத்துவதற்கான சந்தர்ப்பமாக ரஷ்யா இதனைப் பார்க்கிறது. தனது வல்லரசு குணத்தை சிரியாவின் பின்கதவு வழியாக உலகிற்கு அறிவிக்க அது ஆசைப்படுகிறது. எனவேதான் மேற்குலகின் அழுத்தங்களை அலட்சியப்படுத்தி வருகிறது. சீனா சிரியாவிற்கு அளிக்கும் ஆதரவின் காரணம் அது தன்னையும் வல்லரசாக உலக அரங்கில் நிலை நிறுத்த முனைவதுதான். 

இரான் சிரிய பிரச்னையை உலக நாடுகளுடனான பேரம் பேசலுக்கான சந்தர்ப்பமாகக் கருதுகிறது - அதிலும் குறிப்பாக மேற்குலகுடன் இரானின் அணுக்கொள்கை குறித்த விசயங்களில். மட்டுமல்லாமல் லெபனானில் இயங்கும் ஹெஸபுல்லாக்களைத் தொடர்பு கொள்ள சிரியா போல இலகுவான வழியும் இரானுக்கு வேறில்லை. எனவே சந்தர்ப்பத்தை இரான் முழுமையாக்கிக் கொள்கிறது. இத்தோடு இரான்,இராக், லெபனானின் ஒரு பகுதி உள்ளிட்ட ஷியா முஸ்லிம்கள் பெருவாரியாக இருக்கும் இன்னொரு பகுதியாக சிரியா விளங்குகிறது. 

சுருக்கிச் சொல்வதானால், மேற்கிற்கும் கிழக்கிற்குமான சித்தாந்த மற்றும் பொருளாதாரப் போராட்டமாக சிரியா அமைந்திருக்கிறது.எனவேதான் சிரியப் போராட்டம் சிரியாவின் மீது அரேபிய கூட்டமைப்பு நாடுகள் ஐரோப்பிய யூனியனோடு இணைந்து பிறப்பித்த பொருளாதாரத் தடைகளையும் தாண்டி போராட்டம் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது.. இன்னமும் நீடிக்கக் கூடும்

சிரியப் போராட்டம் எந்தத் திசையில் செல்லும் என்பதை இந்த நேரத்தில் எவராலும் தீர்மானிக்க முடியாது. ரஷ்யா தனது மன மாற்றத்தை ஏதேனும் பொருளாதாரக் காரணிகளுக்காக செயல்படுத்த முனைந்தால் இப்போதைய சிரிய அதிபர் பஸாரின் நிலைமை மோசமாகக் கூடும். சீனாவையும் முழுமையாக நம்ப முடியாது. ஆதாயம் இல்லாமல் எதிலும் இறங்க சீனா துணியாது. 

 எஞ்சியிருப்பது இரான் மட்டுமே. உலக நாடுகள் அதிலும் குறிப்பாக இஸ்ரேலிய எதிர்ப்பும் அதற்கான அமெரிக்க ஆதரவும் இருக்கும் நிலையில் இரான் என்ன முடிவெடுக்கும் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது எனவே அரசு தரப்பு வீழ்ச்சியடைவதும் மக்கள் தரப்பு வெற்றி பெறுவதும் உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவின் மூலமே சாத்தியம். இன்றைய நிலையில் அது எட்டாக்கனி போலவே இருப்பதால்தான் சிரியா இன்னமும் வித்தியாசப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog