Breaking

Tuesday

வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களை ஆசிரியசேவை தரம் 3ற்குள் உள்வாங்க திறந்தபோட்டிப்பரீட்சை..


(காரைதீவு     நிருபர் சகா)

வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களை ஆசிரியசேவை தரம் 3ற்குள் உள்வாங்க வடக்குமாகாணசபை திறந்த போட்டிப்பரீட்சை நடாத்தவுள்ளது.அதற்காக தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இதுவொரு நல்ல சகுனம்.

இவ்வாறு கல்முனையில் ஆறுதல் நிறுவனத்தின் முன்பள்ளிக்கல்வித்துறை  நிபுணர் எஸ்.மாதவகுமாரன் தெரிவித்தார்.


கல்முனைப்பிராந்திய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒருவருட முன்பள்ளிக்கல்வி டிப்ளோமா 2017ஃ2018 ஆம் ஆண்டுக்கான கற்கைநெறியின் அங்குரார்ப்பணவைபவம் நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை காலை கல்முனையில் நடைபெற்றபோது உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

ஆறுதல் நிறுவனம் றோட்டரிக்கழக அனுசரணையுடன் நடாத்திவரும் இப்பயிற்சி நெறியின் இரண்டாவது அணியினருக்கான அங்குரார்ப்பணவைபவம் கல்முனை பிராந்திய இணைப்பாளர் பி.சிவப்பிரகாசம் தலைமையில் பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

நிகழ்வில் ஆறுதல்  நிறுவன முன்பள்ளி நிகழ்ச்சித்திட்டத்தின் நிபுணத்துவஆலோசகர் எஸ்.மாதவகுமாரன் கல்முனை றோட்டரிக்கழக தலைவர் எம்.சிதம்பரநாதன் வலயபிரதிநிதி எம்.ஏ.எம்.றசீன் உள்ளிட்ட அதிதிகள்  மற்றும்  வளவாளர்களும் கலந்துகொண்டனர். விரிவுரையாளர் வி.ரி.சகாதேவராஜா அங்குரார்ப்பணநிகழ்வை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.இந்த அணியில் 50முன்பள்ளி ஆசிரியைகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 

அங்கு அவர் மேலும் பேசுகையில்:

வட மாகாணசபை கோரிய விண்ணப்பத்தின்படி க.பொ.த.சா.தரத்தில் தமிழ் கணிதம் உள்ளிட்ட 6பாடங்களில் சித்தி அடிப்படையான தகைமையாக கோரப்பட்டுள்ளது.

மேலும் முன்பள்ளிகல்வித்துறையின் ஒரு வருட டிப்ளோமாப்பாடநெறியை பூர்த்தி செய்திருக்கவேண்டும். இச்சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்டிருக்கவேண்டும். அதாவது பல்கலைக்கழகம் தேசியகல்விநிறுவகம் ஆறுதல் போன்ற நிறுவனங்களால் அவை வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

எனவே அத்தகைய பயிற்சிநெறியைப் பயில வந்துள்ள நீங்கள் பாக்கியசாலிகள். இது நல்லதொரு சகுனம். இதனையடியொற்றி ஏனைய மாகாணசபைகளும் முன்பள்ளி ஆசிரியர்களை ஆசிரியசேவைக்குள் உள்வாங்கும். எனவே உங்கள் வாழ்வில் புதிய ஒளிவீசும்காலம் அண்மித்துள்ளது. நம்பிக்கையுடன் பயிற்சியைத் தொடருங்கள்.

கிழக்கில் 200பேருக்கு பயிற்சி!

இந்த முன்பள்ளிகல்வி டிப்ளோமாப் பயிற்சிக்கு ஒவ்வொருவருக்கும் றோட்டரிக்கழகம் 17ஆயிரத்து 500ருபாவை எமக்கு வழங்குகின்றது. கடந்த இருவருடங்களாக றோட்டரி நிதியுதவி வழங்குகின்றது.எனவே மிகவும் நன்றிக்குரியவர்களாக இருக்கவேண்டும்.

இதுவரை ஆறுதல் நிறுவனம் 3500 முன்பள்ளி ஆசிரியர்களை பயிற்றுவித்துள்ளது. அதன் பிரதம நிறைவேற்றதிகாரி சுந்தரம் டிவகலாலா பெரும் தீர்க்கதரிசி. சிறந்தநிருவாகி. அதனால் இத்துறையோடு மேலும் பல சமுகசேவைகளை 2011இல் திருமலையில் ஆரம்பிக்கப்பட்ட ஆறுதல் நிறுவனத்தினூடாகச் செயற்படுத்திவருகின்றார்.

கிழக்கில் இம்முறை 200 ஆசிரியர்களுக்காக இவ் ஒருவருட கற்கைநெறி 5இடங்களில் நடாத்தப்படுகின்றது. என்றார்.

இறுதியில் பயிலுனர்க்கு முன்பள்ளிக்கல்வி டிப்ளோமா கற்கை அலகுக்கையேடு பாடவிதானம் அனைத்தும் வழங்கப்பட்டன.
இதேவேளை அன்று  12மணியளவில் திருக்கோவில் பிராந்திய 50ஆசிரியர்கள் கொண்ட அணியினருக்கான கற்கைநெறி திருக்கோவில் தம்பிலுவில் தேசிய கல்லூரியிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.


நேற்றுமுன்தினம்  (17) திருகோணமலை மூதூர் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடைபெற்றது. 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog