Breaking

Wednesday

மண்மீட்பு சாத்வீக போராட்டமே இன்று உள்ளுராட்சி தேர்தல் என்ற வடிவில் எமக்கு கிடைத்திருக்கின்றது. அதனை எமது மக்கள் சரியாக பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை நமக்குண்டு.“


(நேர்காணல்-எஸ்.அஷ்ரப்கான்)


கேள்வி- இம்முறை உள்ளுரட்சி தேர்தலில் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கல்முனையை எவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் ?


பதில் -  கல்முனை மாநகரத்தின் முதல்வராக 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை மக்களினுடைய அமோக ஆதரவின் ஊடாக ஆட்சி செய்தேன். மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக புதிய சிந்தனை நோக்கிய பயணத்திற்காக ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளை எனக்கு வழங்கினார்கள். அதனை வைத்து இரண்டு வருடங்களில் பாரிய வேலைத்திட்டத்தை நான் செய்திருந்தேன். 
அதனால் நான் கூறுகின்றேன், ஆட்சியை பிடிப்பதென்பது மக்களுக்கு சேவை செய்கின்ற அரசியல்வாதிகளுக்கு மிக இலேசான காரியம். “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்து வருகின்ற நிலையில் இம்முறை கல்முனை மண்ணை நாம் மீட்டே ஆகுவோம். மண்மீட்பு சாத்வீக போராட்டமே இன்று உள்ளுராட்சி தேர்தல் என்ற வடிவில் எமக்கு கிடைத்திருக்கின்றது. அதனை எமது மக்கள் சரியாக பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை நமக்குண்டு.“


கேள்வி - சமகால பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்ற சாய்ந்தமருது  தனி உள்ளுராட்சி சபைக் கோரிக்கை தொடர்பாக உங்களின் கருத்தென்ன ?


பதில் – நாளுக்கு நாள் இக்கோரிக்கைக்கு பலமாக மக்கள் ஒன்றுதிரண்டு கொண்டிருக்கின்றார்கள். ஆட்சியாளர்கள் விட்ட தவறு காரணமாக இன்று இந்நிலை ஏற்பட்டிருக்கின்றது.


  கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை, மருதமுனை, பாண்டிருப்பு போன்ற ஊர்களை உள்ளடக்கியதாக  இந்த மாநகர சபை காணப்படுகின்றது. இதில் சாய்ந்தமருது பிரதேசம் என்பது தனி முஸ்லிம்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசமாகும். ஒரு பிரதேச செயலாளர் பிரிவாக இருந்தும் பிரதேச சபை ஒன்று இல்லாத ஒரு ஊராக இருக்கின்றது. நான் சாய்ந்தமருதில் பிறந்தாலும் எனது முதல்வர் பதவிக்காலத்தில் எல்லா ஊர் மக்களையும் அரவணைத்தே சென்றிருக்கின்றேன்.


 எந்த அபிவிருத்தியாக இருந்தாலும் கல்முனை மாநகரத்தின் சகல பிரதேசங்களுக்கும் பகிர்ந்து வழங்கியிருக்கின்றேன். என்றாலும் இதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது அப்போது கல்முனை முதல்வராக இருந்த எனக்கு நன்றாகத் தெரியும், குருகிய நிதியோ அபிவிருத்தியோ வருகின்றபொழுது அதனை சமமாக பங்கிடுவதென்பது பாரிய சவாலாகும். எனவேதான் கல்முனை மாநகர எல்லைக்குள் இன்னுமொரு அதிகாரம் வருகின்றபொழுது அங்கும் மேலதிக நிதியும் அபிவிருத்திகளும் சேவைகளும் வரும்.

எனவேதான் மக்கள் நியாயமான எந்தக் கோரிக்கையை முன்மொழிகின்றார்களோ அது தொடர்பாக கவனமெடுக்க வேண்டியது அப்பகுதிசார் அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். அந்த அடிப்படையில் இன்னுமொரு தனி அதிகாரம் வந்தால் இம் மாநகர மக்கள் நன்மையடைவார்கள் என்ற ஒரே நோக்கத்தில் முதன் முதலில் நான் தான் இந்த சாய்ந்தமருதிற்கான தனி அதிகாரக் கோரிக்கையை முன்வைத்தேன்.


கேள்வி- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் அம்பாரை மாவட்டத்தில் எவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் ?


பதில்- நான் ஊர் மீதும், இந்த மாநகரத்தின் மீதும் பற்றுள்ளவன். நான் முதல்வராக இருந்தபோது இரவு பகல் பாராது கோடிக்கணக்கில் எனது சொந்தப் பணத்தில் மக்களுக்கு சேவையாற்றியிருக்கின்றேன். எனக்கு எந்த விமர்சனமும் இல்லாமல் முதல்வர் பதவி என்ற அமானிதத்தை சிறப்பாக பயன்படுத்திய நிலையில்தான்  நான் பதவி துறக்கப்பட்டேன்.

 எனவே விட்ட இடத்திலிருந்து தொட்டுச் செல்வதற்கே நாம் இன்று மக்கள் மன்றத்தின் முன் வந்துள்ளோம். கல்முனை மாநகர சபைக்கு புதிய எனது கற்பனையிலான கட்டிடம், வீதிகள் அபிவிருத்தி, திண்மக் கழிவகற்றலில் நவீன நடைமுறை மொத்தமாக எமது கட்சியின் தலைமையின் வழிகாட்டுதலுடன் கல்முனை நவீன மா நகராக உருவாக்கப்படும்.கேள்வி- கல்முனை மண்னை மீட்டெடுப்பதற்கான சாத்வீக போராட்டமே இம்முறை உள்ளுராட்சி தேர்தல் என நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அவ்வாறெனில் முன்னிருந்த ஆட்சியாளர்கள் கல்முனை அபிவிருத்தியில் அக்கறை காட்டவில்லையா ?


பதில்- முன்சென்ற ஆட்சியாளர்கள் அபிவிருத்தி செய்தார்களா ? இல்லையா ? என்பது தொர்பாக நான் கூறவேண்டிய அவசியமில்லை. அதனை மக்கள் நன்கு அறிவார்கள். எனவேதான்  நாங்கள் செய்த அபிவிருத்தி கல்முனை மாநகரம் மட்டுமல்ல முழு அம்பாரை மாவட்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட வேண்டிய காலம் கனிந்துள்ளது. அதனை தொடர்வதற்காகவே உரிமை என்றும் அபிவிருத்தி என்றும் இரவு பகல் பாராது உழைக்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்கின்றோம்.


கேள்வி- இறுதியாக கல்முனை மாநகர வாக்காளர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகின்றீரகள் ?


பதில்- இளைஞர்களை துாண்டிவிட்டு உரிமைக் கோசமெழுப்புவதை விட்டுவிட்டு நாகரீகமான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவாக்குவதற்காக வேட்பாளர்கள் மற்றும் அதிகாரத்திலுள்ள  அரசியல்வாதிகள் இணைந்து மக்கள் பணி செய்ய முன்வாருங்கள். தேர்தல் நெருங்குகின்ற  இறுதி தருணத்தில் மக்கள் முன் வருகின்ற படித்த பண்புள்ள  சேவை மனப்பாங்கு கொண்ட கட்சியை தேர்ந்தெடுத்து அதன் வேட்பாளர்களை இத்தேர்தலில் வெற்றியடையச் செய்யுங்கள்.  அப்போதுதான் மண்ணும் மக்களும் மகிமை பெறும் ஆட்சியை இப்பிரதேசத்தில் நாம் ஏற்படுத்தலாம்.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog