Breaking

Tuesday

18தமிழ்க்கிராமங்கள் கபளீகரம் செய்யப்பட்டபோது இந்தக்கூட்டமைப்பு எங்கே போனது?


காரைதீவு நிருபர் சகா

அம்பாறை மாவட்டத்தில் 18 தமிழ்க்கிராமங்கள் முற்றாக கபளீகரம் செய்யப்பட்டபோது இந்த த.தே.கூட்டமைப்பினர் எங்கே சென்றார்கள்? இன்று பருவகாலப்பறவைகள்போல தேர்தலுக்குமட்டும்வந்து தமிழரின் பிரச்சினைகளை சர்வதேசம் கொண்டுபோவோம் எனக்கூறுகிறார்கள். இனியும் இவர்களை நம்பி ஏமாந்தால் எங்களைப்போன்ற வடிகட்டிய சமுதாயமொன்று உலகில் இருக்கமுடியாது.

இவ்வாறு காரைதீவில் நேற்று இடம்பெற்ற சுயேச்சைக்குழு பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றிய மீன்சின்ன வேட்பாளர் சின்னத்துரை நந்தேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

இந்த 18தமிழ்க்கிராமங்களையும் பறிகொடுத்ததுபோன்று இன்று காரைதீவையும் பறிகொடுத்து நல்லிணக்கம் வளர்க்க இந்தக்கூத்தமைப்பினர் தலைப்பட்டுள்ளனர்.

காரைதீவுமக்கள் எடுத்த ஊர்த்தீர்மானத்திற்கு முரணாக நடந்து இன்று காரைதீவார்கள் மத்தியில் தும்புக்கட்டுக்கதை கதைக்கிறார் ஒரு எம்.பி.

பொதுமேடைகளில் ஒரு எம்.பி. தும்புக்கட்டுக்கதை கதைப்பது நாகரீகமா? இப்படிப்பட்ட தும்புக்கட்டுகளைத் தெரிந்த மக்கள்தான் குற்றவாளிகள். இவற்றை தங்கள் தங்கள் ஊரோடு வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சாராயத்திற்கும் வீரப்பேச்சுக்கும் இம்முறை மயங்கமாட்டார்கள் காரைதீவார்கள்.

தமிழ்மக்களின் ஒற்றுமைபற்றி கூத்தமைப்பினர் கதைப்பதற்கு எந்தத்தகுதியும் இல்லை. அவர்களுக்குள்ளே  முதலில் ஒற்றுமையை ஏற்படுத்தட்டும். காரைதீவை ரெலோவுக்கு கொடுத்தார்கள். அதற்குள்ளும் குத்துவெட்டுக்கள். புளொட் பிரதிநிதிகளை ஓரங்கட்டினார்கள். பிரதான வேட்பாளர் என்று பொய்சொல்லி ஏமாற்றி இருவரிடம் ஒப்பம் பெற்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை அம்போ என கை விட்டது மாபெரும் துரோகம். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தக்க பாடம் படிப்பிக்க மக்கள் தயாராக வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்வையில் உலாவும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வரலாற்றுத் தோல்வியைக் கொடுக்க அனைத்து மக்களும் வாக்களிக்கச் செல்ல வேண்டும்.

இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் சார்ந்த மக்களை மட்டும் நிர்க்கதியாக விட்டு சுகபோகத்துக்காகக் கைவிரிக்கவில்லை. கிழக்கு மாகாண மக்களையும் நிர்க்கதியாகவே விட்டுள்ளது. கிழக்கு மாகாணசபை ஆட்சி அதிகாரத்தை முஸ்லிம்களிடம் கொடுத்து தமிழர் தேச அபிவிருத்திகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் என்பது மறக்க முடியாத உண்மை.

ஆகவே அனைத்து தமிழ் பேசும் உறவுகளும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை தோற்கடிக்க வீட்டுச் சின்னத்தை நிராகரியுங்கள். என்றார்.



செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog