Breaking

Wednesday

முஸ்லிம் காணிகளில் சட்டவிரோத மதில் கட்டியதன் பின்னணியில் இருப்பவர் யார்?


முஸ்லிம் காணிகளில் சட்டவிரோத மதில் கட்டியதன் பின்னணியில் இருப்பவர் யார்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேள்வி

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாஞ்சோலை பதுரியா மைதானத்துக்கு மதில் கட்டுகின்றபோது, முஸ்லிம் குடியிருப்பு காணிகளை சேர்த்துக் கட்டியுள்ளார். சட்டவிரோதமாக செய்யப்பட்ட இந்த விடயத்தில் பிரதேச செயலாளர் தலையிடக்கூடாது என்று கட்டளையிட்டது யார் என்று நாங்கள் கேட்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, ஒட்டகச் சின்னம் சுயேட்சைக்குழுவில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (06) மீராவோடையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

மாஞ்சோலை பதுரியா மைதானத்தில் சட்டவிரோதமாக மதில் கட்டப்படும்போது, அதில் தலையிடக்கூடாது என்று பிரதேச செயலாளருக்கு உத்தவிட்டவர் யார். சட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்த மதில் விடயத்தில், இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து பிரதேச செயலாளர் மிகவும் மனவருத்தப்பட்டு பேசுகிறார். இப்படி மாற்றுத்தரப்பு ஆதரவாக இருக்கின்‌ற இந்த அரசியல்வாதி மாஞ்சோலை எல்லைப் பிரச்சினைக்கு ஒருநாளும் தீர்வை பெற்றுத்தரப் போவதில்லை. 

முஸ்லிம் சமூகம் எனக்கு வாக்களிக்கவில்லை. மாற்று சமூகம் வாக்களித்துதான் நான் பாராளுமன்றம் போனேன். இவர்களை கவனிக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று புலம்பித்திரிந்த இந்த பிரதியமைச்சரின் அரசியல் முடிவுக்கு வருவதைக் கண்டு மாறிக்கொண்டு புலம்புகிறார். இந்தப் பிரச்சினைகளில் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்தது என்று இப்போது கேட்டுக்கொண்டு திரிகிறார்.

மாஞ்சோலை எல்லைப் பிரச்சினைக்கு மஹிந்த காலத்திலேயே தீர்வுகண்டிருக்கலாம். அப்போது அதை தீர்த்து வைக்காதவர்கள் இன்று அதை தீர்க்கப்போவதாகவும், இதுபற்றி முஸ்லிம் காங்கிரஸுக்கு என்ன தெரியும் என்றும் கேட்கின்றனர். இங்கிருந்து வந்த எல்லா தூதுக்குழுக்களுடனும் நேரடியாக பேசி, சம்பந்தப்பட்ட அமைச்சுகளில் இப்பிரச்சினையை தெளிவுபடுத்தி இதற்கான தீர்வினை காணமுற்படுகின்றபோது, அதில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டு இப்போது எங்களை குறைகூறித் திரிகின்றனர். 

வெளியிலுள்ள காணிகளை பிடிப்பதில் குறியாக இருக்கின்ற அரசியல்வாதிகள், மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதில் நோக்கமில்லாமல் இருக்கின்றனர். தியாவெட்டுவான், வாகரை போன்ற பிரதேசங்களில் எவ்வளவு காணிகள் பிடிக்கப்பட்டன என்று மக்களுக்குத் தெரியும். அப்பாவி மக்களின் காணிகளை அடாத்தாக பிடிக்கின்‌ற அரசியல்வாதிகள் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வினை பெற்றுக்கொடுக்க மாட்டார்கள்.

மீராவோடை வைத்தியசாலையில் நாங்கள் 30 இலட்சம் ரூபாவை செலவழித்து சில நிர்மாண வேலைகளை செய்திருக்கிறோம். ஆனால், இங்கு ஆளனிப் பற்றாக்குறை நிலவுகின்றது. இப்பிரச்சினையை நாங்கள் பொறுப்பெறுத்து சிறப்பாக இயக்குகின்ற வைத்தியசாலையாக இதனை மாற்றித் தருவோம். இதுதவிர, ஓட்டமாவடி - வாழைச்சேனைக்கான பாரிய நீர் வழங்கல் திட்டத்தை இந்த வருடத்தில் ஆரம்பிப்பதற்கான அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுள்ளோம்.

ஓட்டமாவடிக்கு ஒரு கைத்தொழில் பேட்டை அமைத்து தருவதாக ஏற்கனவே வாக்குறுதியளித்திருக்கிறேன். 12 வருடங்களாக கைத்தொழில், வர்த்தக அமைச்சராக இருந்து செய்யாத வேலையை, இப்போது நாங்கள் செய்துகொடுக்க தயாராகின்றபோது தாங்கள் செய்யப்போவதாக கூறித்திரிகின்றனர். நாங்கள் செய்ய முற்படும்போதுதான் அவர்களுக்கு ஞானம் பிறந்திருக்கிறது என்றார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog