Breaking

Friday

காரைதீவு பிரதேசவைத்தியசாலை 3வது நாளாக பூட்டு! நோயாளர்கள் அவதி: பொலிஸ் தலைமையில் மாநாடு!


(காரைதீவு  நிருபர் சகா)

காரைதீவு பிரதேச வைத்தியசாலை (27)வியாழக்கிழமை 3வது நாளாக  பூட்டப்பட்டுள்ளது.

இதனால் நோயாளர்கள் கடந்த இருதினங்களாக  வேறு வைத்தியசாலைகளுக்குச்செல்ல வேண்டி நேரிட்டது. நோயாளர்ள் பலத்த சிரமத்திற்குள்ளாக நேரிட்டது. 
(28) வெளிநோயாளர்பிரிவு  மருத்துவ விடுதிகள் அனைத்தும் வெறிச்சோடிக்கிடந்தன.

கடந்த இருதினங்களாக  எந்தநோயாளருக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. ஆனால் வைத்தியர்கள் தொடக்கம் அனைத்து ஊழியர்களும் வைத்தியசாலையில் சமுகமளித்திருந்ததைக்காணமுடிந்தது.

நேற்றுமுன்தினம்(26) செவ்வாய்க்கிழமை அங்கு இடம்பெற்ற சம்பவமொன்றின் எதிரொலியாகவே வைத்தியசாலை பூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 தவிசாளர் நேரடி விஜயம்!
இதேவேளை (28) வியாழக்கிழமை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் நேரடியாக வைத்தியசாலைக்கு விஜயம்செய்து நிலைமைகளைப்பார்வையிட்டு வைத்தியசாலை திறக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதேவேளை சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகரி எம்.கே.இப்னுஅசார் விடுத்த அழைப்பையடுத்து சம்மாந்துறைக்குச்சென்றார்.

அங்கு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஜீவராணி சிவசுப்பிரமணியம் தலைமையிலான வைத்தியசாலை டாக்டர்கள் அரசவைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் பொலிஸ் பொறுப்பதிகாரி அசார் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். தவிசாளரும் சென்று கலந்துரையாடி ஒருமுடிவுக்குவந்தனர்.

அரசவைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கல்முனைப்பிராந்திய தவைர் டாக்டர் மிஹ்லார் செயலாளர் டாக்டர் ஹாரீஸ் ஆகியோரும் வைத்தியர்கள்சார்பாக கலந்துரையாடினர். 

பொலிஸ் பொறுப்பதிகாரி இப்னு அசார் கலந்துரையாடலின்மூலம் பிரச்சினையைத்தீர்த்து மக்களுக்கு சுகாதார சேவையை வழங்க வேண்டியதன் அவசியத்தை அருசாராருக்கும் எடுத்துரைத்தார்.

அந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி (28) வியாழக்கிழமை மாலை காரைதீவு வைத்தியசாலையில் சமரச மாநாடு ஒன்றை நடாத்துவது எனவும் அதில் பிரதேசசபைத்தவிசாளர் உள்ளிட்ட 12உறுப்பினர்களும் வைத்தியசாலை நிருவாகிகளும் தொழிற்சங்கபிரதிநிதிகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் கலந்துகொண்டு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது எனத்  தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி (28)மாலை கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வைத்தியஅதிகாரி டாக்டர் ஜீவாவிடம் கேட்டபோது:
முன்னாள் வைத்தியத்துறைப்பேராசிரியர் டாக்டர் வரகுணம் எமக்கு அன்பளிப்பாக வழங்கிய வைத்தியசாலைக்குச்சொந்தமான பிரதானவீதிக்கருகாமையிலுள்ள காணி தற்காலிகமாக மைதானமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

அங்கு எமது சுகாதாரத் திணைக்கள ஊழியர்களுக்கிடையிலான விளையாட்டுநிகழ்வை நடாத்த பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளரின் எழுத்துமூல வேண்டுகோளுக்கமைவாக 4தினங்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
ஊழியர்கள் விளையாடிக்கொண்டிருக்கையில் அங்கு வழமையாக விளையாடும் ஊர்ச்சிறுவர்கள் தாமும் இதே மைதானத்தில் விளையாடவேண்டும் என்று சர்ச்சையைக்கிளப்பினர்.

அவர்களிடம் நான் உள்ளவிளக்கத்தை தெளிவாக்சொன்னேன். அவர்கள் போய்விட்டார்கள்.
சிலமணிநேரத்துள் மற்றுமொரு கும்பல்வந்து தாறுமாறாக எம்மிடம் கேள்வியெழுப்பி ஆர்ப்பாட்டத்திலிடுபட ஆயத்தமானது. விளக்கத்தை அவர்களிடமும் நானும் சக வைத்தியர்களும் சொன்னோம். அவர்கள் கேட்பதாயில்லை. 

வேறு வழியின்றி வைத்தியசாலையைப பூட்டுவதற்கு முடிவெடுத்து உரிய தலைமைகளிடம் அறிவித்துவிட்டு நாம் அன்றிரவு வெளியேறினோம்.

இதற்கொரு தீர்வு எட்டும்வரை காலவரையறையின்றி நாம் நோயாளிகளைப்பார்ப்பதில்லை என தீர்மானித்துள்ளோம். என்றார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog