Breaking

Sunday

புலிக்குப் பிறந்தது என்ன பூனையாகுமா?


-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
------------------------------------------------------------------------------
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல (அம்பாறை) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மன்சூர் அவர்கள் இன்று (22) நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை நிச்சயமாக வரலாற்றில் இடம்பெறும். தனது சமூகம்சார்ந்த நலன்கள் தொடர்பில் அவரது தனது வேதனைகள், ஆதங்கங்கள், ஏமாற்றங்களைஅவருக்கு ஒதுக்கப்பட்ட ஆறு நிமிடங்களில் ஒட்டுமொத்தமாகக் கொட்டித் தீர்த்தார். அவரது உரை இன்று பலரையும் சமூகத்தின்பால் கரிசனை கொள்ளச் செய்துள்ளது.


அவரது உரையைக் கேட்டுக் கொண்டிருந்த போது, இவர் ஓர் எதிர்க்கட்சி உறுப்பினரா என்ற சந்தேகம் கூட எனக்குள் எழுந்தது. இவரிடம் காணப்பட்ட துணிச்சல், வீரம் நிறைந்த பேச்சு, அநியாயத்துக்கு எதிரான கம்பீரக் குரல், ஆக்ரோஷம் ஆகியனவற்றை யாரிடமிருந்துதான் இவர் கடன் பெற்றாரோ என என்னைச் சிந்திக்கச் செய்தது.

அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது மாமனிதர் மர்ஹும் அஷரஃப் அவர்களின் போராளிப் பரம்பரையைச் சேர்ந்தவர் இந்த மன்சூர் என்பது. அவரது பாசறையின் தொட்டிலில் கிடந்து தோள் வரை வளர்ந்த போராளிப் பெருமகன் அல்லவா இந்த மன்சூர்? புலிக்குப் பிறந்தது என்ன பூனையாகுமா?

மாமனிதர் அஷ்ரஃப் அவர்களுடன் ரணங்களையும் கணங்களையும் பங்கு போட்டுக் கொண்ட போராளி ஒருவனின் சமூகம் சார்ந்த உணர்வு, அதன் வெளிப்பாடுகள் எப்படியிருக்க வேண்டும் என்பதனை தெட்டத் தெளிவாக வெளிக்காட்டியுள்ள கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் பாராட்ட வேண்டும். எங்களது சமூகம் எங்கு, ஏமாந்து நிற்கிறது என்பதனை அம்பலப்படுத்தி இன்று எம்மையே சிந்திக்கச் செய்துள்ளார்.

அவருக்கு வழங்கப்பட்ட அந்த ஆறு நிமிடங்களில் தான் சார்ந்த சமூகம் எதிர்கொண்டுள்ள அவலங்களையும் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களையும் எதிர்கொண்டுள்ள ஏமாற்றங்களையும் மிக ஆக்ரோஷமான முறையில் கர்ஜித்த அவர் துணிச்சல் அபாரம்.

தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம் என்பார்கள். அதனை கௌரவ மன்சூர் அவர்களிடம் நான் இன்று கண்டு கொண்டேன். தெளிவான குறிக்கோளுடன் ஒருவன் செயற்படும் போது அவன் நிச்சயமாக தொடை நடுங்கியாக இருக்கமாட்டான். துணிச்சலுடன் செயற்படுவான் என்பதனை மன்சூர் அவர்கள் நிரூபித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதாக தீர்மானித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதற்கான பிரதி உபகாரமாக முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு பிரதமர் ரணிலிடம் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்ததாகவும் அதனைக் கூட இந்த நல்லாட்சி அரசாங்கம் இதுவரை செய்யவில்லை என்றும் மிகப் பகிரங்கமாக அவர் தெரிவித்திருந்தார்.

எந்தளவுக்கு முஸ்லிம் சமூகம் இந்த நல்லாட்சி அரசினால் கறி வேப்பிலையாகப் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது என்பதற்கு மிகப் பிந்தியதான சாட்சிப் பதிவாக கௌரவ மன்சூர் அவர்களின் இந்த உரை அமைந்திருந்தது.

முஸ்லிம்கள் என்பதற்காக உயர் பதவிகளை வழங்குவதில் காட்டப்படும் பாரபட்சம், காணி அபகரிப்பு உட்பட முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பிலும் அவர் பல விடயங்களை மிகத்துணிச்சலுடன் அம்பலப்படுத்தினார். அநீதி, பாரபட்சங்களுடன் இந்த அரசாங்கம் நடந்து கொண்டால் இந்த அரசாங்கம் ‘நல்லாட்சி’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற அர்த்தத்தில் அவர் கடும்தொனியில் கூறினார்.

இறுதியாக, அவர் இன்றைய அரசுக்கு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். அத்துடன் இவ்வாறான நிலைமை தொடரும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறி முடித்தார்.

இந்தப் பிள்ளையும் பால்குடிக்குமா என்று மன்சூர் தொடர்பில் எண்ணம் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு ‘இல்லை இந்தப் பிள்ளை நிச்சயம் பால்குடிக்கும்’ என்பதனை நிரூபித்துள்ளார் சம்மாந்துறை மண்ணின் மைந்தன் மன்சூர். அவருக்கு எனது கௌரவமான வாழத்துக்கள்.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog