Breaking

Monday

சம்மாந்துறை தேசிய பாடசாலையின் மாபெரும் நடைபவனி விரைவில்.

இது எங்கள் கல்விக்கூடம்! இனிதென்றும் சிறக்கச் செய்வோம்!

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) எமது பிரதேசத்தின் மிக முக்கிய பணியாற்றிவருகின்ற நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட அறிவுத் தொழிற்சாலையாகும்.

தென்கிழக்கிலங்கையில் புவியியல் ரீதியிலும், வரலாற்று ரீதியிலும் தனித்துவம்மிக்க சம்மாந்துறைப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ள நமது பாடசாலையின் சிறப்புகள் பலவுள்ளன. 

தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நமது பாடசாலையின் பெயரும்,நமது பாடசலை மாணவர்களின் பெயரும் உச்சரிக்கப்பட்டுள்ளன. இன நல்லுறவுடன் சகல மாணவர்களும் கல்வி பயின்றுள்ளனர். பிறமாவட்டங்களிலிருந்தும் பல மாணவர்கள் கல்வித்தரத்திற்காய் நமது பாடசாலையை நாடி வந்திருக்கின்றனர்.

நமது கல்விப்பாரம்பரியத்தின் காலக்கோட்டில் நாம் பல ஏற்ற இறக்கங்களையும் சவால்களுக்கும் முகம் கொடுத்து இன்றைய நிலையை அடைந்துள்ளோம். 

சர்வதேச, தேசிய மட்டங்களில் செயற்படும் பல புத்திஜீவிகளை நமது பாடசாலை உற்பத்தி செய்துள்ளது. துணைவேந்தர்கள், நீதியரசர்கள், பேராசிரியர்கள், கலாநிதிகள், முதுமானிகள் உட்பட வைத்தியம், சட்டம், பொறியியல்,கலை, தொழிநுட்பம், விஞ்ஞானம், இணைமருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளமானி பட்டதாரிகளையும் கொண்டுள்ளோம். ஆனாலும் எமது ஊரின் சனத்தொகை விகதாசாரத்தோடு ஒப்பிடுகையில் நமது அடைவுகளின் விகிதம் போதுமானவையாக இல்லை.

இன்று, நமது கல்விப்பாரம்பரியத்தின் இன்னொரு பொற்காலத்தை வடிவமைக்க வேண்டிய கடப்பாடு நம் முன்னே இருக்கின்றது. நாம் நமது எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்கான முன்னேற்பாடுகளை தூரதரிசனத்துடன் கட்டமைக்கும் பொறுப்பு நம்மனைவரின்மீதும் சாட்டப்பட்டிருக்கின்றது. மேலும், நமது சமூகம் வருங்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள பாரிய சவால்களுக்கான சமிக்ஞைகள் வெளிக்காட்டப்பட்டுள்ள இன்றைய சூழலில் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஆற்றலும், ஆளுமையும்மிக்க புத்திஜீவிதத்துவமுள்ள ஒரு இளைய சமுதாயத்தை வழிகாட்ட வேண்டிய காலத்தின் பலவந்தமும் நமது கல்விப் பாரம்பரியத்தின் புத்தெழுச்சி பற்றி நம்மனைவரையம் சிந்திக்கவைத்தது.

இதன் ஒருபேறாகவும் நமது சமூகத்தின் கூட்டுமன வெளிப்பாடாகவும் அண்மையில் நமது பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பு மீள உருவாக்கப்பட்டுள்ளது. 

இதனை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடாத்திச் செல்வதற்கும் நமது நீடித்து நிலைக்கக்கூடிய எதிர்கால திட்டங்களை சிறப்பாக வடிவமைக்கவும், வெற்றிகரமாகச் செயற்படுத்தவும் நம்மனைவரினதும் ஒத்துழைப்புகளும் ஈடுபாட்டுடனான செயற்பாடுகளும் அத்தியவசியமானது. இதுவே நமது இயங்கியலைத் தீர்மானிக்கக்கூடியது. இனிவரப்போகின்ற இளைய மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் அமையக்கூடியது.

அந்தவகையில் நமது பழைய மாணவர் அமைப்பில் பூரணமாக அனைத்து மாணவர்களையும் உள்வாங்குவதற்காக முதற்கட்ட நடவடிக்கையாக நடைபவனி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன் அதியுச்ச இலக்கான நமது தூரநோக்கு,நம் அனைத்துச் செயற்பாடுகளினதும் பொதுக் குறிக்கோளான 'சம்மாந்துறையை முன்மாதிரியான அறிவார்ந்த சமூகமாக செயற்படுத்தல்' என்ற கூற்று அமைகின்றது.

இங்கு நாம் நடைபவனியை முதலில் ஏன் செயற்படுத்த வேண்டும், அதற்கான அவசியம் என்ன என்பது பற்றி நாம் தெளிவாகிக்கொள்ள வேண்டியுள்ளது.

இலங்கையின் பாடசாலைக் கலாச்சாரங்களுள் நடைபவனிகள் காலாகாலமாக இடம்பெற்றுவரும் ஒரு நிகழ்வு இது கடந்த பத்தாண்டுகளிலேயே நமது கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நிறுவனமயப்படுத்தப்பட்ட அரச பாடசாலைகள் நமது பிராந்தியத்தில் நூற்றாண்டை அண்மித்தமை குறிப்பிட்ட இந்தத் தசாப்தத்திலாகும். அதேவேளை இந்நிகழ்வு இதற்கு முன் பழையமாணவர்களின் நடைபவனிகள் நமதூரில் நடைபெறவில்லை. 

நமது பாடசாலையில் நீண்டகாலத்திற்குப் பிறகு மீள முகிழ்த்துள்ள நமது அமைப்பில் அங்கத்தவர்களினை இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. வெறுமனே படிவங்களை நிரப்பி மாத்திரம் அங்கத்தவர்களாகாமல் நமது ஆத்மார்த்த நேசத்தை வெளிப்படுத்தவும்,  மீண்டும் ஒருமுறை பாடசாலை நிகழ்வொன்றில் தங்கள் சகபாடிகள் மற்றும் பிற சிரேஷ்ட கனிஷ்ட மாணவர்களுடன் ஒரு பாடசாலை மாணவனாக ஒரு நாளைக் கழிக்கவும்.

நானும் இந்தப்பாடசாலையின் ஒரு மாணவன் என்பதிற் பெருமிதங் கொள்கின்றேன் என்பதனை பிரகடனப்படுத்தவும், நமது பாடசாலையின் பலத்தை உலகறியச்செய்யவம், நமது அடுத்த கட்ட நகர்விற்கான உத்வேகத்தை பெற்றுக்கொள்ளவும், அனைத்து மாணவர்களையும் மீள இணைப்பதற்கான ஒரு சிறந்த பொறிமுறையாக இது காணப்படுகின்றது. 

நாம் நமது நினைவுகளில் மீட்டிக் கொண்டிருக்கின்ற நமது பாடசாலைக்காலத்தை மீள ஒரு முறை நமது வகுப்பறைகளில், நமது தோழமைகளுடன், நமது அதிபர்களுடன், ஆசிரியர்களுடன் உள்ளம் திறந்து உணர்வுகளைக் வெளிப்படுத்த நாம் மீண்டும் நமது கல்விக்கூடம் செல்ல இந்த வாய்ப்பு இனியும் கிடைக்க இது ஒரு முன்முயற்சியாகும்.

எந்தவொரு அதிசிறந்த திட்டமானாலும் அது நிகழ்த்தப்பட நிதிபலம் அவசியமாகும், நமது இவ்வமைப்பின் ஆரம்பகட்ட மூலதனத்தைத் திரட்டவும், நமது பழையமாணவர்களில் நிதிப் பங்களிப்புகளை வழங்கக்கூடியவர்களினை தாமாக முன்வந்து ஒத்துழைப்புகளை வழங்க இந்நிகழ்வை ஒரு தளமாக பயன்படுத்தமுடியும் என்பதும் ஒரு முக்கிய நோக்கமாகும்.

மேலும் எதிர்கால திட்டங்களிற்கு தங்களின் ஆற்றல்கள் திட்டமிடற் திறன்கள், ஆளணி வளங்கள், பிற தொடர்புகள் மூலம் ஆதரவளிக்கக்கூடியவர்களை இனங்கான்பதற்கும் இந்நிகழ்வு உதவும் என்று நம்புகின்றோம்.

மீண்டும் அறிவின் பொற்காலம் செழிக்க, இனமத பேதமின்றி சகல மாணவர்களும் ஒழுக்க விழுமியங்களுடன் நவயுக சவால்களுக்கும், போட்டிமிக்க தொழில்சந்தையில் தங்கள் இடத்தைத் தக்கவைக்கவும் தெற்காசியாவின் முன்மாதிரி மிக்க ஒரு கல்விச்சாலையாக மிளிரச் செய்யவும் நம்மனைவரினதும் பிரார்த்தனைகளும், பூரண ஒத்துழைப்புகளும் அவசியமாகும். 

இந்நடைபவனி இறைவனின் நல்லருளுடன் வெற்றிகரமாக நடைபெற நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.

புதிதொரு விதி செய்வோம்
நம் பள்ளிக்கூடம் செழிக்கச் செய்வோம்

It’s our land, It’s our heritage
It’s our pupil, It’s our pride
Let’s unite – to raise us
We are the forces of the School!

follow us on:செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog