Breaking

Tuesday

கிழக்கானின் தப்புக்கு கண்டியானா பொறுப்பு?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
---------------------------------------------
‘கிழக்கு வாழ் மக்களை முழந்தாளிடச் செய்ய வைப்போம் , கிழக்கில் நல்ல தலைமை இருந்தால் ஏன் எங்களைத் தேடி வருகின்றீர்கள்’ என்ற கருத்துகளைத் தெரிவித்து கிழக்கு முஸ்லிம்களை மிகக் கேவலப்படுத்திய சபீக் ரஜாப்தீனை மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராக நியமித்துள்ளது.


இதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களை முழந்தாளிடச் செய்வோம் என்று கூறிய நபரின் முள்ளந்தண்டை அந்தக் கட்சி நிமிர்த்தியுள்ளது. இந்த நியமனம் தொடர்பில் கிழக்குவாழ் முஸ்லிம்களில் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகள் அல்லர்) பெரும் எண்ணிக்கையிலானோர் தங்களது அதிர்வலைகளையும் கவலை, கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பூர்வீக பூமியான கிழக்கையே தனது அகங்காரக் கால்களினால் மிதித்து துவம்சம் செய்த நபருக்கு அந்தப் பதவியை மீண்டும் வழங்கியிருக்கவே கூடாது. அத்துடன் அதற்கான அகப்புறச் சூழல்களைக் கூட மற்றவர்கள் ஏற்படுத்தியதும் பாரிய தவறு என்பதே எனது வெளிப்படையான கருத்து.

இந்த விவகாரத்தில் நானும் அதிருப்தி கொண்டவனாகவே உள்ளேன். சபீக் ரஜாப்தீனின் நியமனத்தை எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. பல விடயங்களில் வெந்து போயுள்ள கிழக்கு முஸ்லிம் மக்களின் மனதில் இந்த விடயம் வேலை ஏற்றுவது போன்றே அமைந்துள்ளது.

இன்றைய நல்லாட்சி அரசானது, குற்றஞ் சாட்டப்பட்ட சில அமைச்சர்களை நீக்கி விட்டு நிலைமை சுமூகமடைந்தவுடன் மீண்டும் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது போன்ற பாணியிலேயே முஸ்லிம் காங்கிரஸின் இந்தச் செயற்பாட்டை நோக்க வேண்டும்.

சபீக் ரஜாப்தீன் கிழக்கு மக்களைக் கேவலப்படுத்தி தனது முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் அன்று எழுந்த சர்ச்சைகளின் போது, பிரதியமைச்சர் எம்.எச். எம் ஹாரீஸ் அவர்கள், மிகக் கடுமையாகக் காணப்பட்டார். சபீக் ரஜாப்தீனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கட்சியின் முக்கியஸ்தர்களில் அவர் முதல் மனிதர் சுபஹ் தொழுகை முடிந்த கையுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமைச்சந்தித்து இது தொடர்பில் தனது கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டதுடன் சபீக் ரஜாப்தீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஒற்றைக் காலில் நின்றவர் பிரதியமைச்சர் ஹாரிஸ் அவர்கள்.


ஆனால், இன்று அதே நபருக்கு தேசிய அமைப்பளார் பதவி வழங்கப்பட்ட போது பிரதியமைச்சர் ஹாரீஸ் அவர்கள் மௌனியாக காணப்படுவது என்னைப் பொறுத்த வரை ஆச்சரியமாகவே உள்ளது.

இதேவேளை, இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைலரான அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களை முற்று முழுதாக குற்றம் சுமத்துவது நியாயமாகாது. அது தவறானது. 'கண்டியான் கிழக்கு முஸ்லிம்களுக்கு துரோகம் செய்து விட்டான்' என்றெல்லாம் முகநூல்களில் பதிவிடுவது முட்டாள்தனம். இவ்வாறானவர்களின் பாணியில் கூறப் போனால் தேசிய அமைப்பளார் நியமன விவகாரத்தில் கண்டியான் தவறு செய்யவில்லை. கிழக்கானே தவறு செய்தான் என்பதே அப்பட்டமான உண்மை.

கடந்த வெள்ளிக்கிழமை (03) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெற்ற போது, தேசிய அமைப்பாளர் தெரிவுக்காக அங்கிருந்தவர்களால் இருவரின் பெயர்களே பிரேரிக்கப்பட்டன. புத்தளம் நகர பிதா பாயிஸ், மற்றவர் சபீக் ரஜாப்தீன். இவர்களின் இருவரது பெயர்களும் பிரேரிக்கப்பட்ட போது பலத்த கருத்து முரண்பாடுகள் எழுந்தன. புத்தளம் நகர பிதா பாயிஸுக்கு எதிராகவே பாரிய எதிர்ப்புகள் எழுந்தன.

இதன்போது கட்சியின் தலைவர் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள், புத்தளம் நகர பிதா பாயிஸ் அவர்களைக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிப்பது தொடர்பிலும் கட்சிக்கான அவரது முக்கியத்துவம் குறித்தும் விலாவாரியாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும் பாயிஸுக்கு எதிராக எழுந்த பாரிய எதிர்ப்பலைகள் காரணமாக அவரால் எதனையும் செய்ய முடியாத நிலைமையிலேயே சபீக் ரஜாப்தீன் தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில், பாயிஸுக்கு ஆதரவானவர்களும் சபீக் ரஜாப்தீனுக்கு எதிரானவர்களும் மேலும் அங்கு பேசா மடந்தைகளாக இருந்தவர்களும் மௌனம் சாதித்தனர். ஏன் இவர்கள் சபீக் ரஜாப்தீனின் நியமனத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை?

சரி, அதுதான் போகட்டுமே தேசிய அமைப்பளார் கிழக்கிலிருந்துதான் வரவேண்டும் என்று வெளியே வாய்கிழியக் கத்துவோரும் அதனை ஆதரிக்கும் எண்ணம் கொண்டவர்களும் சபீக் ரஜாப்தீன் வெளியிட்ட கருத்துக்களை முன்னர் எதிர்த்தோரும் அன்றைய கட்டாய அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதும் ஏன் அவர்களால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவரை தேசிய அமைப்பாளர் பதவிக்கு அங்கு பிரேரிக்க முடியாது போனது ? ஏன் அவ்வாறு செய்யவில்லை?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் மற்றும் அரசியல் பீடங்களில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடையே காணப்படும் போட்டி, முரண்பாட்டுத் தன்மை, வெட்டுக் குத்துகளே இவ்வாறான பிரச்சினைகள் எழக் காரணமாகின்றன. அவர்கள் ஒற்றுமைப்பட்டு ஒரு குரலாக இருந்திருந்தால் இந்த நிலைமை எழுந்திருக்காதே?

இதற்கு ஓர் உதாரணத்தை நான் கூறுகிறேன். கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.ஸி. யஹ்யாகான் அவர்களை கட்சியின் பிரதிப் பொருளாளராக நியமிப்பதற்கு கொள்கையளவில் இணக்கம் காணப்பட்ட போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் யார்? கண்டியைச் சேர்ந்தவர்களா? களுத்துறையைச் சேர்ந்தவர்களா? இல்லவே இல்லை. கல்முனையைச் சேர்ந்தவர்களே. யஹியாகான் அவர்களின் ஊரான சாய்ந்தமருதைச் சேர்ந்த அதே கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் இருவர்தானே யஹியாகானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.

பல்வேறு எதிர்ப்புகள், மோசமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் தனது ஊரையே எதிர்த்து கட்சிக்காகப் போராடியவர் யஹியாகான். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சாய்ந்தமருதுவில் போட்டியிட்ட அவரது கட்சியைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக நின்றவர் யஹியாகான். சாய்ந்தமருதுவில் கட்சியின் சார்பில் அதிக வாக்குகளைப் பெற்றவர். இப்படிப்பட்டவருக்கே அவரது ஊரைச் சேர்ந்த, அவரது கட்சியைச் சேர்ந்தவர்களாலேயே இந்தத் துரோகம் செய்யப்பட்டது என்றால் மற்றவர்களை எவ்வாறு குற்றஞ் சொல்வது?

எனவே, நியாயங்களைப் புரியாமல், யதார்த்தங்களை அறியாமல் மற்றவர் மீதோ மற்றவர்கள் மீதோ குற்றச்சாட்டுகளை முன்வைத்து வசைபாடுவது அநீதியானது என்பதனை இங்கு வெளிப்படையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog