Breaking

Thursday

300பூதவுடல் கடலினுள் சங்கமம்: மீதி மயானம் பாதுகாக்கப்படவேண்டும்! கரையோரப்பாதுகாப்பு என்பது மக்களுக்கா? அல்லது அதிகாரிக்கா?


(காரைதீவு  நிருபர் சகா)


இதுவரை 300 பூதவுடல்கள் கடலினுள் அடித்துச்செல்லப்பட்டிருக்கின்றன. மீதி மயானத்தையாவது காப்பாற்றுவோம் என்று அணைக்கட்டு கட்டினால் அதைத்தடுக்கவருகிறார் கரையோரப்பாதுகாப்பு அதிகாரி. அவரின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டை வன்மையாகக்கண்டிக்கிறேன்.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் மாதாந்த அமர்வில் உரையாற்றிய சபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சீற்றத்துடன் கூறினார்.

இந்த அமர்வு நேற்றுமுன்தினம் (9) சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதேசசபை உறுப்பினர் மு.காண்டீபன் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதேசசபை உறுப்பினர் மு.காண்டீபன் 'காரைதீவு பொது மயானம் கடலினுள் அடித்துச்செல்லப்படும் அபாயமுள்ளது. எனவேதான் அந்த அணைக்கட்டு கட்ட சபையும் பிரதேசஅபிவிருத்திச்சபையும் தீர்மானித்திருந்தன. ஆனால் அது கட்டப்பட்டுவரும்வேளையில் அதனை தடுத்து நிறுத்தியதாக அறிந்தேன். அது உண்மையா? யார் நிறுத்தியது? அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இன்றேல் மக்கள் போராட்டம் வெடிக்கும். இதற்கு தவிசாளர் என்ன கூறுகிறீர்கள்? ' என்று கேட்டபோதே தவிசாளர் மேற்கண்டவாறு சீற்றத்துடன் பதிலளித்தார்.

அங்கு தவிசாளர் மேலும் பேசுகையில்:
3500ஏக்கர் வயலுக்குள் இருந்துவரும் வடிச்சல் தண்ணீர் நேராக கடலுக்குள் போகவேண்டும். நிந்தவூரிலிருந்து வரும் தண்ணியும் கடலுக்குள்செல்லவேண்டும். இதனால் விவசாயிகள் நன்னீர் மீனவர்கள் சலவைத்தொழிலாளிகள் ஏன் ஒட்டுமொத்த காரைதீவு நிந்தவூர் மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்களது நிலங்களும் பாதுகாக்கப்படும்.

அப்படிப்பட்ட அணைக்கட்டை அமைக்க எமதுமுயற்சியின்பேரில் மாகாணசபையின் கிராமிய அபிவிருத்தித்திட்டத்தின்கீழ் 40லட்சருபா செலவில் இவ் அணைக்கட்டு அமைக்கப்பட்டுவந்தது. இடைநடுவில் இவ்வாறு கரையோரப்பாதுகாப்பு அதிகாரி வந்து தலையிட்டு அதனை நிறுத்தவேண்டும் என தான்தோன்றித்தனமாகக்கூறியிருப்பதுகண்டு வேதனையடைகின்றேன்.

அப்படியானால் கரையோரப்பாதுகாப்புத் திணைக்களம் மக்களுக்கானதா? அல்லது இவ்வாறு இனரீதியாகச் சிந்திக்கின்ற அதிகாரிகளுக்கானதா? என்று சிந்திக்கத்தோணுகிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

எமது மக்களின் பூதவுடலை அடக்கும் மயானத்தைக்கூடப் பாதுகாக்க பிரதேசசபைக்கோ பிரதேசசெயலகத்திற்கோ முடியாதா? என்று கேள்வியெழுப்பினார்.

உறுப்பினர்களான ஆ.பூபாலரெத்தினம் கே.ஜெயராணி ஆகியோர் கூறுகையில்: இவ்வெட்டுவாய்க்கால் பிரச்சினையால் எமது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த அணைக்கட்டு கட்டாயம் அமைக்கப்படவேண்டும். எந்த அதிகாரி எதிர்த்தாலும் அதனை விடக்கூடாது. நாம் சபை அனைவரும் குரல்கொடுப்போம். வேலையைத் தொடருங்கள் என்றனர்.

2019இல் கட்டணம் உயரும்?
சபை தொடங்கிய காலம் முதல் இன்றுவரை மாற்றப்படாமலிருந்துவரும் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்காக மக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டணம் இன்று டீசல்விலை உழவுஇயந்திரப்பராமரிப்பு தொடக்கம் சகலதும் உயர்ந்திருப்பதனால் கட்டணத்தையும்  இருமடங்காக உயர்த்தவேண்டும் என்று சபைத்தவிசாளர் ஜெயசிறில் சபையிடம் கோரினார்.

உறுப்பினர் சபாபதி நேசராசா கூறுகையில் சமுர்த்தி பெறுநருக்கும் ஏனையோருக்கும் ஒன்றரை மடங்காக அதிகரித்து ஏனையவர்களுக்கு இரு மடங்காக அதிகரிப்பது நல்லது என்றார்.

தவிசாளர் அதனை ஏற்றுக்கொண்டு சபையின் ஏகோபித்த அனுமதியுடன் 2019 ஜனவரி 1முதல் அமுலுக்கு வரும் வகையில் சமுர்த்திபெறுநர் 45ருபாவையும் ஏனையோர் 75ருபாவையும் வர்த்தகர்கள் 200ருபாவையும் உணவகம் ஹோட்டல்கள் 500 ருபாவையும் கட்டணமாகச் செலுத்தவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

நிதிக்குழு அமைக்கப்படவேண்டும்!
உபதவிசாளர் ஏ.எம்.ஜாகீர் கூறுகையில்: எமது சபையின் 8வது மாதாந்தகூட்டமிது. இதுவரை நிதிக்குழு அமைக்கப்படவில்லை. உபகுழுக்கள் அமைக்கப்படவில்லை. நிதிக்குழு அமைத்தால் மட்டுமே நான் உடன்படுவேன் என்றார்.
பதிலுக்கு தவிசாளர் கூறுகையில்; உபகுழுக்கள் என்றோ அமைக்கப்பட்டுவிட்டன. நிதிக்குழு மாநகரசபைக்குத்தான் கட்டாயம். பிரதேசபைக்கு கட்டாயமென்றில்லை. எனினும் நீங்கள் அனைவரும் விரும்பினால் நிதிக்குழுவை அமைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும்  இல்லை. 
தாராளமாக விசேடகூட்டமொன்றைக்கூட்டி அதில் அதனைத் தெரியலாம். அலவாங்கால் பிளக்கமுடியாததை அன்பால் பிளக்கலாம். குரோதத்தால் எதனையும் சாதிக்கமுடியாது. அது வெல்லவும் முடியாது.
என்றார்.

தமிழ்ப் பிரதேசசபைகள் புறக்கணிக்கப்படுகிறதா?
தவிசாளர் கூறுகையில்:எமக்கு அவசியாக ஒரு கெப் வாகனமும் ஒரு லோடரும் இரு வவுசர்களும் தேவையென்று வருட ஆரம்பத்திலேயே உள்ளுராட்சி அமைச்சிடம் விண்ணப்பித்திருந்தோம். தற்போது கெப் தவிர்ந்த ஏனைய வாகனங்களைத்தருவதாகக்கூறப்பட்டிருக்கிறது.

உண்மையில் எமக்கு அத்தியாவசியமாக கெப் வாகனம் தேவை. தவிசாளரின் வாகனம் பழுதடைந்துவிட்டது.அதனைக் கட்டியிழுத்தும் தள்ளியும் திரியவேண்டிய அவலநிலையுள்ளது. நான் மாட்டுவண்டிலிலும் செல்வேன். ஆனால் அது எனக்கு கௌரவமில்லை. ஏன் சபை உறுப்பினர்களுக்கு கௌரவமில்லை எம்மைத்தெரிந்த மக்களுக்கும் அழகல்ல.

இங்குள்ள ஏனைய சம்மாந்துறை நிந்தவூர் அட்டாளைச்சேனை சபைகளைப்பார்க்கின்றபோது அதிநவீன கெப் வாகனங்களை தவிசாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.மகிழ்ச்சி. ஆனால் காரைதீவு நாவிதன்வெளி கொக்கட்டிச்சோலை போன்ற தமி;ழ்ச்சபைகளை பார்க்கின்றபோது மிகவும் பழைய வாகனங்களே உள்ளன. இது ஒருவகையில் திட்டமிட்ட புறக்கணிப்பு . தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சபைகளுக்கு புதிய வாகனம் மறுக்கப்பட்டிருக்கின்றது. நல்லாட்சியிலும் இப்படியான  பாரபட்சம் தொடர்வது வேதனைக்குரியது.

த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் த.மோகனதாஸ் இடைமறித்துக் கூறுகையில்: தவிசாளரே! முன்பிருந்த தவிசாளர் இராசையா வாடகைக்கு வாகனம் எடுத்துப் பாவிக்கவில்லையா? அனுபவிக்கவில்லையா? நீங்களும் பாவியுங்கள் என்றார்.

வெளிச்சமுள்ள காரைதீவாக மாற்றவேண்டும்!
மாவடிப்பள்ளி உறுப்பினர் ஜலீல் பேசுகையில்: யானைப்பிரச்சனை தலைவிரித்தாடுகி;றது. காரைதீவு மாவடிப்பள்ளி பிரதானவீதியில் போடப்பட்டுள்ள எல்ஈடி பல்ப்புகள் இரவு 7மணிக்குப்பின் எரிகிறது. மாவடிப்பள்ளிப்பக்கம் பல்ப் போடப்படவில்லை. ஏன்? எனக் கேள்வியெழுப்பினார்.

பதிலளித்த தவிசாளர் ஜெயசிறில் கூறுகையில்:
எம்மிடம் எந்த ஆலோசனையுமில்லாமல்தான் வீதி அபிவிருத்தி அதிகாரசபை இந்த பல்புகளை பிரதானவீதியில் பொருத்தியது. அந்த பல்புகள் இயல்பாக எரியும் தன்மைகொண்டவை. நாம் இயக்குவதில்லை. மற்றது அதற்கான மின்கட்டணத்தை நாமே செலுத்தவேண்டும்  எனவும் கூறியுள்ளனர்.இடையில் நின்றதற்கும் அவர்களே காரணம். சபையல்ல. உண்மையில் முடியுமானவரை மின்விளக்குகளைப்போட்டு மாளிகைக்hடு மாவடிப்பள்ளி அடங்கலாக முழுக்காரைதீவையும்  வெளிச்சமாக்கவேண்டும் என்பதே எனது அவா. என்றார்.

மாரிக்கு முன் கான் சுத்தம்!
உறுப்பினர்களான  எம்.எம்.இஸ்மாயில் ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன்  எம்.பஸ்மீர் எம்.றணீஸ் ஆகியோர் பேசுகையில்;:
வருவது மாரி காலம். எனவே வடிகான்களை விசேட ஏற்பாட்டில் துப்பரவாக்கவேண்டும். இன்றேல் டெங்கு நோய் பரவும் அபாயமேற்படும் என்றார்கள்.

பதிலளித்த தவிசாளர் ஜெயசிறில் கூறுகையில்:
இதை நான் ஏலவே திட்டமிட்டிருந்தேன். காரைதீவு பிரதேசசபைக்குட்பட்ட 7வட்டாரங்களிலும் வௌ;வேறு தினங்களில் அந்தந்த வட்டாரப்பிரதிநிதிகளின் மேற்பார்வையில் தலா 6 வேலையாட்களைக்கொண்டு இருக்கின்ற அத்தனை வடிகான்களையும் சுத்தம் செய்யவேண்டும். 

வேலையாட்களை நீங்களே தெரிவுசெய்யுங்கள். சபையால் தலைக்கு 1500ருபா வீதம் தரப்படும் . அத்துடன் உழவு இயந்திரமும் தரப்படும். வேலையைத் தொடருங்கள். முழுக்காரைதீவையும் சுத்தமாக்குங்கள்.  என்றார்.

இறுதியில் இம்முறை தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவுப்பிரதேசத்தில் சித்திபெற்ற 26 தமிழ்முஸ்லிம் மாணவர்கள் அனைவரையும் 'வித்யசாஹித்யவிழா' என்ற பெரும் பாராட்டுவிழாவை  நடாத்தி கௌரவிப்பதென்று தீர்மானமாகியது.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog