Breaking

Friday

இலங்கையின் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ.


இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவியேற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதியாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக பதவி வகித்தார்.
அந்தக் கட்சியின் போட்டிக்கட்சியான மஹிந்த ராஜபக்‌ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருந்தது.
ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நீடித்து வந்தன.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, கூட்டணி அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதுடன் மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னதாக ஜனாதிபதியின் முன்பாக புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவரது பதவிப் பிரமாணம் செய்த காட்சிகளை தொலைகாட்சிகள் ஒளிபரப்பின.
நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகிக் கொள்வதாக இன்று மாலை அறிவித்தது. இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுள்ளார்.



அடுத்த மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தின் அடுத்த சந்திப்பு நடக்கவுள்ளது. அன்றைய தினம் ராஜபக்‌ஷ தனது பெரும்பான்மையை நிருபித்தாக வேண்டும்.
தற்போது மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளமையானது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருவதாக அவரது தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அடுத்துவரும் நாட்களில் அரசியலில் எவ்வாறான மாற்றங்கள் நிகழும் எனக் கேட்டபோது, புதிய பிரதமரும், ஜனாதிபதியும் பேச்சு நடத்தி அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிப்பார்கள் எனக் கூறினார்.
அடுத்து தேர்தல் நடக்குமா அல்லது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிருபிக்கப்படுமா என்பது குறித்து கேட்டபோது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் எனினும், இறுதித் தீர்மானத்தை பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் பேச்சு நடத்தி அறிவிப்பார்கள் எனவும் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை இலங்கையில் நடத்தி வந்தன. இரண்டு கட்சிகளுக்கும் இடையே காணப்பட்ட முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தென் இலங்கை அரசியல் ஆய்வாளர் சிவராஜா தெரிவித்தார்.
-BBC-
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog